ராணிப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ராணிப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிப்காட் (ராணிப்பேட்டை),
ராணிப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, விஷாரம், கல்மேல்குப்பம், சோளிங்கர், அரக்கோணம் உள்பட அனைத்து ஜமாத்களின் சார்பில் ஊர்வலமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ராணிப்பேட்டை பாலாறு பாலம் அருகே இருந்து சர்ஜமாத் அமைப்பினர் கலந்துகொண்ட ஊர்வலம், ஆற்காடு சாலை, பழைய பஸ் நிலையம், கிருஷ்ணகிரி சாலை வழியாக வந்து ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியை சென்றடைந்தது. இதனையடுத்து முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை சர்ஜமாத் தலைவர் அப்துல் வாஜித் தலைமை தாங்கினார். சர்ஜமாத் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் உலமாக்கள் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் முகம்மது உசைன் வரவேற்றார். இதில் ராணிப்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ. வாலாஜா அசேன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் முகம்மதுஅசன் நன்றி கூறினார்.
இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தை யொட்டி ஆற்காட்டில் இருந்து, ராணிப்பேட்டைக்கு வரும் அனைத்து வாகனங்களும் ராணிப்பேட்டை பாலாற்று பாலத்தில் இருந்து பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதேபோல் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் இருந்து எம்.பி.டி.சாலை வழியாக வந்த அனைத்து வாகனங்களும் ராணிப்பேட்டை பழைய பஸ் நிலையம் செல்லாமல் முத்துக்கடை பகுதியில் இருந்து எம்.பி.டி.சாலை வழியாக வாலாஜாவிற்கு திருப்பி விடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story