தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த எலி, அணில், நாய் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை


தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த எலி, அணில், நாய் பறிமுதல் - திருப்பி அனுப்ப நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Dec 2019 5:00 AM IST (Updated: 23 Dec 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட கங்காரு எலி, புல்வெளி நாய், சிவப்பு அணில், நீல பல்லி ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவற்றை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது மைதீன்(வயது 28) என்பவர் விமான நிலையத்தில் சந்தேகப்படும்படியாக அங்கும் இங்குமாக சுற்றி கொண்டு இருந்தார்.

இதனால் அவரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் சிறிய அளவிலான 8 பிளாஸ்டிக் கூடைகள் இருந்தன. அவற்றின் மீது ஓட்டிஇருந்த பிளாஸ்திரியை பிரித்து கூடையை திறந்து பார்த்தனர். அதில் வன உயிரினங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரிடம் இருந்த 8 கூடைகளிலும் வடஅமெரிக்காவில் வாழும் 12 கங்காரு எலிகள், 3 புல்வெளி நாய்கள், இங்கிலாந்து, ரஷியா, இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் சிவப்பு அணில், கைமென் நாட்டில் காடு மற்றும் கடலோர பகுதியில் வாழும் 5 நீல பல்லிகள் இருந்தன. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவற்றை யாருக்காக தாய்லாந்தில் இருந்த கடத்தி வந்தீர்கள்? என முகமது மைதீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர், “இவை எனக்கு சொந்தமானது இல்லை. தாய்லாந்து நாட்டு விமான நிலையத்தில் இந்த கூடைகளை என்னிடம் கொடுத்த ஒருவர், சென்னை விமான நிலையத்தில் இதை வேறு ஒருவர் வந்து பெற்றுக்கொள்வார்” என்று கூறியதாக தெரிவித்தார்.

இதையடுத்து முகமது மைதீனை விமான நிலையத்தின் வெளியே அழைத்து வந்து, அவரிடம் இருந்த வன உயிரினங்களை வாங்க யாராவது வருகிறார்களா? என அதிகாரிகள் கண்காணித்தனர். ஆனால் அப்படி யாரும் வரவில்லை.

இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்கா டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமான நிலையம் வந்த அவர்கள், கூடைகளில் கடத்தி வரப்பட்ட வன உயிரினங்களை பரிசோதனை செய்தனர்.

பின்னர் அவர்கள், “எலி, நாய், அணில், பல்லி ஆகியவை ஆரோக்கியமாக உள்ளன. ஆனால் பிற நாடுகளில் இருந்து கொண்டு வரும்போது உரிய மருத்துவ பரிசோதனை செய்துபிறகுதான் எடுத்து வர வேண்டும். இதனால் இவற்றை இந்திய அரசு அனுமதி இன்றி வைக்க முடியாது” என்றனர்.

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட எலி, நாய், பல்லி, அணில் ஆகியவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story