தண்ணீரில் மூழ்கி அழுகி வரும் நெற்பயிர்கள் - கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என விவசாயிகள் வேதனை
கற்காத்தகுடி பகுதியில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது. இதனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் விவசாய நேரத்தில் பருவமழை பெய்ததால் விவசாயிகள் தங்களின் விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். குறுகிய காலத்தில் பலன் தரும் மூன்று மாத பருவ நெல்லாக ஆர்.என்.ஆர்., எம்.சி.ஆர். ஆகிய நெல் வகைகளை விதைத்து உரிய நேரத்தில் உரமிட்டு விவசாயத்தை விவசாயிகள் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தனர்.
பயிர் நன்கு விளைந்து கதிர் வெளியே தள்ளிய நிலையில் அண்மையில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் பெய்த மழைக்கு வயலில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளித்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாரான நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பருவ மழை பொய்த்ததால் இப்பகுதியில் வறட்சி நிலவியது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த பருவ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து ஆர்.எஸ். மங்கலம் தாலுகாவில் ஆர்.எஸ் மங்கலம், ஆனந்தூர், கற்காத்தகுடி, சனவெளி, சோழந்தூர், உப்பூர், அ.மணக்குடி பகுதி விவசாயிகள் கையில் இருந்த பணத்தை வைத்தும், வீட்டில் உள்ள நகைகளை அடகு வைத்தும், தனியாரிடமும் வங்கிகளில் கடன் வாங்கியும் விவசாய பணியை செய்து வந்தனர். தற்போது நெற்பயிர் அறுவடை நேரத்தில் பலனை அடைந்துவிடலாம் என்று விவசாயிகள் நினைத்து இருந்த தருணத்தில் அண்மையில் பெய்த மழையால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கற்காத்தகுடியைச் சேர்ந்த பெண் விவசாயி முத்துலட்சுமி கூறியதாவது:-
கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக மழையில்லாமல் விவசாயம் செய்ய இயலவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் விவசாய பணிகளை மேற்கொண்டோம். நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகும் நேரத்தில் சமீபத்தில் பெய்த மழையால் எங்கும் வெள்ளக்காடாக வயல்வெளியில் உள்ள தண்ணீரை வடிக்க முடியாமல் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் மூழ்கி அழுகி வருகிறது. இந்த ஆண்டாவது விவசாயம் கைகொடுக்கும் என நினைத்த எங்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. வீட்டில் உள்ள நகையை அடகு வைத்தும், தனியார் மற்றும் வங்கியில் வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்று கவலையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story