‘குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு


‘குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல’ - மத்திய மந்திரி நிதின் கட்காரி பேச்சு
x
தினத்தந்தி 23 Dec 2019 5:15 AM IST (Updated: 23 Dec 2019 4:52 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

நாக்பூர், 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மராட்டிய மாநிலம் நாக்பூரில் நேற்று பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி பேசியதாவது:-

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு நீதி வழங்க அரசு எடுத்த முடிவு (குடியுரிமை திருத்த சட்டம்) இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது அல்ல. முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியே அனுப்புவது பற்றி நாங்கள் பேசவில்லை. நம்நாட்டில் வெளிநாட்டினர் ஊடுருவல் குறித்து மட்டுமே அரசு அக்கறை கொண்டு செயல்படுகிறது.

சமூகத்தின் வளர்ச்சிக்கு காங்கிரசால் உதவ முடியாது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி உங்களுக்காக என்ன செய்துள்ளது? இந்த சதித்திட்டத்தை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு வளர்ச்சியை பாரதீய ஜனதாவால் மட்டுமே கொடுக்க முடியும். காங்கிரசால் முடியாது.

நாம் அனைவரும் ஒன்று, நமது மரபு ஒன்று. நீங்கள் மசூதிக்குச் செல்லுங்கள், நாங்கள் அதை எதிர்க்கவில்லை. சட்டமேதை அம்பேத்கர் வகுத்த அரசியல் அமைப்பின்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வோம். இதைத்தான் நாங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறோம். புதிதாக ஒன்றும் கூறவில்லை.

1947-ம் ஆண்டுக்கு முன்பு நாம் அகண்ட பாரதமாக இருந்தோம். பிரிவினைக்கு பிறகு முகமது அலி ஜின்னா பாகிஸ்தானை முஸ்லிம் நாடாக அறிவித்தார். ஆனால் மகாத்மா காந்தி நமது நாட்டை இந்து நாடாக அறிவிக்கவில்லை. மாறாக மதசார்பற்ற நாடாக அறிவித்தார்.

இது முடிவு செய்யப்பட்டபோது, பாகிஸ்தானில் 22 சதவீத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருந்தனர். அவர்கள் அநீதி மற்றும் துன்புறுத்தலை எதிர்கொண்டால் எங்கே போவார்கள் என்று மகாத்மா காந்தியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மகாத்மா காந்தி, ’பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுபான்மையினருக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம், இந்தியா அவர்களுக்கு ஆதரவளிக்கும்‘ என்றார்.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் 100 முதல் 150-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களை முஸ்லிம் நாடுகளாக அறிவித்துள்ளன.

இதேபோல அம்பேத்கர் தனது அரசியலமைப்பில் முஸ்லிம்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற விரும்பினால், அவர்களுக்கு 100 முதல் 150 மாற்றுவழிகள் உள்ளன. எனவே அவர்கள் உலகின் எந்த முஸ்லிம் நாட்டிலும் தங்குமிடம் பெறமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், இந்திய புத்த மதத்தினர், ஜைனர்கள் போன்றவர்களுக்கு செல்ல எந்த தேசமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story