வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 31 லட்சம் வாக்காளர்கள்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 31 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 24 Dec 2019 3:30 AM IST (Updated: 23 Dec 2019 9:20 PM IST)
t-max-icont-min-icon

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர்.

வேலூர், 

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், விடுபட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள சிறப்பு சுருக்க திருத்தம் நடந்தது. இந்த சிறப்பு சுருக்க திருத்த முகாமில் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகம் முழுவதும் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். 13 சட்டமன்ற தொகுதிகளில் 15 லட்சத்து 32 ஆயிரத்து 885 ஆண்கள், 15 லட்சத்து 94 ஆயிரத்து 921 பெண்கள், 180 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்பட 31 லட்சத்து 27 ஆயிரத்து 986 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட 62 ஆயிரத்து 36 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரத்து 475 பேர் இடம் பெற்றுள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் 1,665 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, மண்டல அலுவலகங்கள் உள்பட 1,700 மையங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

1,700 மையங்களிலும் பெயர் சேர்க்க (படிவம்-6), பெயர் நீக்கம் செய்ய (படிவம்-7), திருத்தம் செய்ய (படிவம்-8), சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய (படிவம்-8 ஏ) விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகள் நேற்று முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி வரை செய்யப்பட உள்ளது. ஜனவரி 22-ந் தேதி வரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். என்று மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தெரிவித்தார்.

அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், உதவி கலெக்டர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story