மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோவை,
கோவை டாடாபாத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வி.ஆர்.பாலசுந்தரம் (ஐ.என்.டி.யு.சி.) தலைமை தாங்கி பேசியதாவது:-
உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த பொது வினியோகத்தை பலப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அடிப்படை மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க சட்டத்தை இயற்ற வேண்டும். மாதம் ரூ.6 ஆயிரத்துக்குள் குறையாத ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டி நிரந்தர தன்மையுள்ள தொழில்களில் தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போனஸ், இ.எஸ்.ஐ. பணிக்கொடை சட்டங்களுக்கான ஊதிய உச்ச வரம்பை நீக்க வேண்டும். கோவை மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கும் உரிமையை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் கொடுத்ததை திரும்ப பெற வேண்டும். ஐ,டி. துறைகளில் பணிபுரிந்த ஊழியர்களின் பணிப்பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த தனி சட்டம் இயற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஜி.சீனிவாசன், கோவை செல்வன்(ஐ.என்.டி.யு.சி.), எம்.ஆறுமுகம், சி.தங்கவேல்(ஏ.ஐ.டி.யு.சி.), ராஜாமணி, வீராசாமி (எச்.எம்.எஸ்.), பத்மநாபன், கிருஷ்ணமூர்த்தி(சி.ஐ.டி.யு.) மணி, ஆனந்த்(எல்.பி.எப்.), தியாகராஜன், ஷாஜகான்(எம்.எல்.எப்.) மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story