கோர்ட்டு உத்தரவுப்படி, பவானி பாவடி திடலில் நடப்பட்டிருந்த கற்கள் அகற்றம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
பவானி பாவடி திடலில் நடப்பட்டிருந்த கற்களை கோர்ட்டு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.
பவானி,
பவானி அந்தியூர் பிரிவு சாலை அருகே பாவடி திடல் உள்ளது. இந்த இடத்தை பவானி நகராட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பவானி நெடுஞ்சாலைத் துறைக்கு ஒப்படைத்தது.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சாரார், இந்த இடத்தை நீண்ட காலமாக தாங்கள் பயன்பாட்டில் வைத்து இருந்ததாகவும், எனவே இது எங்களுக்கு சொந்தமான இடம் என்றும் இதனை பவானி நகராட்சி நிர்வாகமோ அல்லது நெடுஞ்சாலைத்துறையோ உரிமை கோர முடியாது என ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இதற்கிடையே பாவடி திடலை நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக பயன்படுத்தாததால் தான் குறிப்பிட்ட ஒரு சாரார் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடுவதாக பொது மக்கள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வந்தது.
இந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு சாரார், கோர்ட்டு இந்த பாவடி திடல் பாவு நூல்கள் உற்பத்தி செய்யும் இடமாக கருதப்படுகிறது. இதனால் இந்த இடத்தை தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என உத்தரவிட்டது என கூறி அந்த இடத்தில் கற்களை நட்டு பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பாவடி திடல் வழியாக கோவை, சேலம், ஈரோடு, பெங்களூரு செல்லும் சிறிய மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் நெரிசல் ஏற்பட்டு் விபத்து நடப்பதால் நெடுஞ்சாலைத்துறையினர் இந்த இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.இதனை விசாரித்த கோர்ட்டு, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள பாவடி திடலில் ஆக்கிரமிக்கப்பட்ட கற்களை பிடுங்க பவானி நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கங்காதரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று பாவடி திடலில் குவிந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஒரு சிலர் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள் கற்களை கட்டிப்பிடித்தபடி அதிகாரிகளிடம் கூறும்போது, ‘இந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. எனவே இங்கு கற்களை பிடுங்கக்கூடாது’ என்றனர்.
இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் மற்றும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பவானி தாசில்தார் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ஆகியோரும் அங்கு சென்று கற்களை பிடுங்கக்கூடாது எனக்கூறியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் சுமுக முடிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து முள் வேலியும் கற்களும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது.
இந்த சம்பவத்தால் பவானி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story