வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில், 39 லட்சம் வாக்காளர்கள் 32,362 பேர் சேர்ப்பு; 9,745 பேர் நீக்கம்


வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: சென்னையில், 39 லட்சம் வாக்காளர்கள் 32,362 பேர் சேர்ப்பு; 9,745 பேர் நீக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:45 AM IST (Updated: 24 Dec 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 39 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். புதிதாக 32 ஆயிரத்து 362 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். 9,745 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன.

சென்னை,

சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வரைவு வாக்காளர் பட்டியலை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா, முன்னாள் எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பாரதிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2020-ம் தினத்தை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும்.

இந்த பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர் இருக்கிறதா? என்று மக்கள் சரிபார்த்து கொள்ளலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் சேராமல் உள்ளவர்கள், 1.1.2020-ம் நாளில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் 23-ந்தேதி (நேற்று) முதல் ஜனவரி 22-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் ஜனவரி 4, 5, 11, 12-ந்தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களையும் பொதுமக்கள் பயன் படுத்தி, உரிய படிவங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தங்கள் செய்துகொள்ளலாம். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 754 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதிகபட்சமாக பெரம்பூரில் 297 வாக்குச்சாவடிகளும், குறைந்தபட்சமாக எழும்பூரில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த மார்ச் 26-ந்தேதி வாக்காளர் பட்டியலில் சென்னையில் 38 லட்சத்து 66 ஆயிரத்து 66 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்தநிலையில் தொடர் திருத்தத்தில் 16,336 ஆண்கள், 16,015 பெண்கள், 11 இதரர் என மொத்தம் 32 ஆயிரத்து 362 வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. 9 ஆயிரத்து 745 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. அந்தவகையில் சென்னையில் தற்போது 19 லட்சத்து 15 ஆயிரத்து 718 ஆண்களும், 19 லட்சத்து 71 ஆயிரத்து 966 பெண்களும், 989 இதரரும் என மொத்தம் 38 லட்சத்து 88 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர்.

அதேவேளை சென்னையின் கூவம் நதிப்பகுதிகள் சீரமைப்பு திட்டத்தின்கீழ் சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, அடையாறு பகுதிகளில் இருந்து சோழிங்கநல்லூர் பகுதிகளில் மாநகராட்சியால் இடம்பெயரப்பட்டவர்கள் பெயர்களை இப்பட்டியலில் சேர்க்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எனவே தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளை விரைவில் மேற்கொண்டு, வருகிற ஜனவரி 22-ந்தேதிக்குள் உரிய அதிகாரிகளை அணுகி பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநகராட்சி மாவட்ட வருவாய் அதிகாரி (தேர்தல்) ஏ.பெருமாள் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story