உத்தவ் தாக்கரே- சரத்பவார் ஆலோசனை - 30-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம்?
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சரத்பவார் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 30-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.
மும்பை,
மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்று கொண்டனர்.
மந்திரி சபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடந்து முடிந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் பாரதீய ஜனதா ஆளும் கட்சிகள் மீது கேள்வி கணைகளை தொடுத்தது.
நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அது நடைபெறவில்லை. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
அவர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினர். மந்திரி சபை விரிவாக்கம் குறித்து அவர்கள் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
முன்னதாக பேட்டி அளித்த சரத்பவார், “மந்திரிசபை விரிவாக்கம் முடிவு என்பது முதல்-மந்திரியின் தனிப்பட்ட உரிமை ஆகும். பதவி பிரமாணத்துக்காக எங்கள் சகாக்கள் எப்போது அழைக்கப்படுவார்கள் என காத்திருக்கிறோம்” என்றார்.
தேசியவாத காங்கிரஸ் மந்திரிகளின் பட்டியல் தயாராக உள்ளதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘எனது கட்சி எதையும் இறுதி செய்ய அதிக நேரம் எடுக்காது’ என்றார்.
இதற்கிடையே காங்கிரசுடன் பேசி மந்திரி சபை விரிவாக்கம் குறித்து இறுதி செய்யப்படும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
இதுமட்டும் இன்றி வரும் 30-ந் தேதி மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அப்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜித் பவார் ஏற்கனவே 2014-ம் ஆண்டு அமைந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் துணை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
Related Tags :
Next Story