சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யாத, ஸ்டாலினுக்கு குடியுரிமை பற்றி பேச தகுதி கிடையாது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
சிறுபான்மையினருக்கு எந்த நன்மையும் செய்யாத ஸ்டாலினுக்கு குடியுரிமை பற்றி பேச தகுதி கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
மதுரை,
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கடச்சநேந்தல், கள்ளந்திரி ஆகிய பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு பொய்யான பிரசாரங்களை செய்து வருகிறார். ஆட்சியில் இருந்த போது சிறுபான்மையினருக்கு தி.மு.க. எந்த நல்லதும் செய்ய வில்லை. ஆனால் கெடுதல் அதிகமாக செய்து இருக்கிறார்கள்.
குடியுரிமை சட்டம் குறித்து சிறுபான்மையினரிடையே ஸ்டாலின் தவறான கருத்துகளை கூறி வருகிறார். ஸ்டாலினுக்கு குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய ஆலங்குளத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டார். அவரது வேஷம் கலைந்து விட்டது. தோல்வி பயத்தால் தான் தேர்தலை நிறுத்த ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தார். அவரது சூழ்ச்சிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முறியடித்து விட்டார். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் பெறப் போகும் வெற்றி, சட்டசபை தேர்தலுக்கு அச்சாரமாக அமையும். பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 1000-ம் மக்களுக்கு கொடுப்பதில் கூட தி.மு.க. கோர்ட்டுக்கு சென்று தடை வாங்குகிறது. தேர்தல் முடிந்த மறுநாளே பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story