ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கீடு


ஊரக உள்ளாட்சி தேர்தல்: மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 10:00 PM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் 141 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு, நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இதில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள உள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

141 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

இதில், முதல்கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள கரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 13 வாக்குச்சாவடிகளும், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் 12 வாக்குச்சாவடிகளும், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் 5 வாக்குச்சாவடிகளும், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 33 வாக்குச்சாவடிகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் 20 வாக்குச்சாவடிகளும், கிரு‌‌ஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 18 வாக்குச்சாவடிகளும், கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 24 வாக்குச்சாவடிகளும், தோகைமலை ஊராட்சி ஒன்றியத்தில் 16 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 141 வாக்குச்சாவடிகள் பற்றமானவை என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள 66 பேருக்கு தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

அறிக்கைகள்

மேலும், வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் பார்வையாளருக்கு உடனுக்குடன் சமர்ப்பிக்க வேண்டிய அறிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் தொடக்கம் முதல் வாக்குப்பதிவு முடிந்து பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகளை ஒப்படைப்பது வரை என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது குறித்து மிக விரிவாக வீடியோ காட்சி மூலம் அனைத்து நுண்பார்வையாளர்களுக்கும் எளிதில் புரியும் வகையில் எடுத்துரைக்கப்பட்டது.

இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சீனிவாசன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குனர் உமாசங்கர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (ஊரக உள்ளாட்சித்தேர்தல்) செல்வராஜ் உள்பட அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story