மங்களூரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக உடுப்பி மாவட்ட கலெக்டர் ஜெகதீஷா நியமனம் மாநில அரசு உத்தரவு
மங்களூரு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியாக உடுப்பி மாவட்ட கலெக்டர் ஜெகதீஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
மங்களூரு,
மங்களூரு துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியாக உடுப்பி மாவட்ட கலெக்டர் ஜெகதீஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவம்
மத்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19-ந் தேதி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் முஸ்லிம் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலவரம் வெடித்தது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் பலியானார்கள்.
இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட்டு தலைமையிலான விசாரணையும் நடைபெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்திருந்தார்.
விசாரணை அதிகாரியான கலெக்டர்
இந்த நிலையில் நேற்று இச்சம்பவம் குறித்த விசாரணை அதிகாரியாக உடுப்பி மாவட்ட கலெக்டர் ஜெகதீஷா நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது. கலெக்டர் ஜெகதீஷாவுக்கு, மாஜிஸ்திரேட்டு அதிகாரமும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறுகையில், “கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த சம்பவம் தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளியே வரும்“ என்று கூறினார்.
Related Tags :
Next Story