மங்களூரு கலவரம் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வெளியீடு ‘திட்டமிட்ட சதி’ என போலீசார் விளக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை போலீசார் நேற்று வெளியிட்டனர்.
மங்களூரு,
மத்திய அரசு, கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 19-ந் தேதி கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் போராட்டம் நடைபெற்றது.
மங்களூருவில் கலவரம்
போராட்டத்தின்போது மங்களூருவில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்கள், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை நடத்தினர்.
அப்போதுதுப்பாக்கிச்சூட்டில் கந்தக் பகுதியைச் சேர்ந்த அப்துல் ஜலீல்(வயது 49) மற்றும் குதுரோலி பகுதியைச் சேர்ந்த நவுசீன்(23) ஆகிய 2 பேர் பலியானார்கள். மேலும் ஏராளமானோர் காயம் அடைந்தனர். அதேபோல் போராட்டக்காரர்கள் தாக்கியதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.
ஊரடங்கு உத்தரவு
இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த மங்களூருவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் மங்களூரு உள்பட தட்சிண கன்னடா மாவட்டம் முழுவதும் இணையதள சேவை முடக்கப்பட்டது. இந்த நிலையில் மங்களூருவில் அமைதி திரும்பியதையொட்டி அங்கு ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. ஆனால் 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அது முழுமையாக வாபஸ் பெறப்படவில்லை.
இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்துல் ஜலீல், நவுசீன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இச்சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணை மற்றும் மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
வீடியோக்கள் வெளியீடு
இதுமட்டுமல்லாமல் முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் அப்துல் ஜலீல், நவுசீன் ஆகியோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு, தங்களது கட்சிகள் சார்பில் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை வழங்கி உள்ளனர். அப்போது அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் அப்பாவிகள் கொல்லப்பட்டு விட்டதாக கருத்து தெரிவித்து இருந்தனர்.
ஆனால் துப்பாக்கிச்சூட்டில் பலியான 2 பேரும் கலவரத்தில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே அவர்களை போலீசார் சுட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மங்களூருவில் போலீசார் கலவரம் தொடர்பான வீடியோக்களையும், புகைப் படங்களையும் வெளியிட்டனர்.
கண்காணிப்பு
கேமராக்களை சேதப்படுத்தி...
அதில் கலவரத்தில் ஈடுபடுவதற்காக சிலர் முன்கூட்டியே திட்டமிட்டு சரக்கு ஆட்டோவில் கற்களை ஏற்றி சம்பவ இடத்திற்கு கொண்டு வந்தது போன்றும், சிலர் கலவரம் ஏற்படுவதற்கு முன்னதாகவே அப்பகுதிகளில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்துவது போன்றும் காட்சிகள் உள்ளன.
மேலும் சிலர் தாங்கள் யார்? என்று போலீசார் அடையாளம் கண்டு விடக்கூடாது என்பதற்காக தங்களது முகங்களை கைக்குட்டைகளால் மூடிக்கொண்டு கல்வீச்சில் ஈடுபடுவது போன்றும், ரகசிய கண்காணிப்பு கேமராக்களை உடைத்தும், அவற்றின் மீது ‘ஸ்பிரே‘ அடித்தும் சேதப்படுத்துவது போன்றும் உள்ளன. அவர்கள் சாட்சிகளை அழிப்பதற்காக கண்காணிப்பு கேமராக்களை உடைத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சித்தராமையா,
குமாரசாமிக்கு பதிலடி
மேலும் போலீஸ் தரப்பில் கூறுகையில், “காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்களில் ஒருவரான குமாரசாமி ஆகியோர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் அப்பாவிகள் என்று கூறினர். ஆனால் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதற்கான வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டுள்ளோம். மங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சதிச்செயலாகும்“ என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநில உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்புடையதல்ல
“போலீசார், உச்சக்கட்ட கலவரத்தின்போது கட்டுப்பாட்டை கடைபிடிக்க முயற்சித்தனர். கலவரம் எல்லை மீறிப்போனதால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. ஆனால் கலவரத்தில் ஈடுபட்ட மோசமான மக்களை சித்தராமையாவும், குமாரசாமியும் அப்பாவி மக்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல.
கலவரம் தொடர்பான வீடியோக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அவைகள் கண்காணிப்பு கேமராக்களிலும், ஊடகவியலாளர்களின் கேமராக்களிலும் பதிவானவை. அந்த வீடியோக்களில் கலவரக்காரர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கல்வீச்சில் ஈடுபடுவதற்காக கற்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி வந்து சம்பவ இடத்தில் வைத்தது தெளிவாக பதிவாகி இருக்கிறது.
திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்
திட்டமிட்டபடி அவர்கள் தங்களது முகங்களை மறைத்துக் கொண்டு கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி, அவற்றை கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் போலீசார் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளையும் வீசி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சித்தராமையா கலவரக்காரர்களையும், கல்வீச்சில் ஈடுபட்டவர்களையும் அப்பாவிகள் என்று கூறி அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார். அவர்களை குற்றமற்றவர்கள் என்று சித்தராமையா சொல்கிறார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story