விசாரணைக்கு சென்ற வீட்டில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது


விசாரணைக்கு சென்ற வீட்டில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் அருகே விசாரணைக்கு சென்ற வீட்டில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது குடும்ப பிரச்சினை காரனமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்துள்ளார்.

இந்த புகார் மனு சம்மந்தமாக விசாரணை நடத்துவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நன்னிலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் அய்யாசாமி(வயது 33), புகார் கொடுத்தவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை

அங்கு புகார் கொடுத்தவர் இல்லை. புகார் கொடுத்தவரின் மகனும், 16 வயது மகளும் மட்டும் இருந்துள்ளனர். சிறுவனை சாக்லெட் வாங்க கடைக்கு அனுப்பிய ஏட்டு அய்யாசாமி, வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து வீட்டுக்கு வந்த தனது தந்தையிடம் அந்த சிறுமி கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் தந்தை இது குறித்து நன்னிலம் போலீசில், ஏட்டு அய்யாசாமி மீது புகார் மனு அளித்தார். மேலும் சிறுமி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியின் தந்தை கொடுத்த புகார் மனு மீது நன்னிலம் போலீஸ் நிலையத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரையிடம் அந்த சிறுமியின் தந்தை புகார் தெரிவித்தார். புகாரை விசாரித்த போலீஸ் சூப்பிரண்டு துரை இந்த புகாரை நாகை மாவட்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்துமாறு கூறினார்.

இதனையடுத்து நாகை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அய்யாசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக விசாரணை நடத்த சென்ற போலீஸ் ஏட்டே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் காவல் துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story