அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை முயற்சி மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 6:50 PM GMT)

ஆண்டிமடத்தில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரியலூர்,

கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அருகே உள்ள குப்பைமேடுப்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 55). இவர் கடந்த 20 ஆண்டுகளாக அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அடகு கடையின் அருகே பர்னிச்சர் கடை வைத்துள்ள மோகன் என்பவர் கடையின் மேல்மாடியில் குடியிருந்து வருகிறார். மோகன் நள்ளிரவு 1 மணி அளவில் சுவர் இடிக்கும் சத்தம் கேட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தார்.

அப்போது அடகு கடையின் பின்பக்க சுவற்றை மர்மநபர்கள் துளையிட்டு கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். இதை அறிந்த கொள்ளையர்கள் இடித்த சுவற்றின் கற்களை எடுத்து மோகன் மீது வீசி தாக்கியுள்ளனர். மோகன் விலகிக் கொள்ளவே அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அதன்பின் மோகனின் சத்தம் கேட்டு அவரது மகன் மற்றும் மனைவி ஓடி வந்து பார்த்தபோது, 3 மர்ம நபர்கள் குல்லா அணிந்து அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதையடுத்து மோகன் தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது, அதில் கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவன் மொட்டை மாடியில் ஏரி அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவை சுவிங்கம் கொண்டு மறைத்து அதன்பின்னர் கொள்ளை அடிக்க முயற்சித்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மோகன் அடகு கடை உரிமையாளர் ராமலிங்கத்திற்கு தகவல் கொடுத்ததை அடுத்து ராமலிங்கம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் கடைக்கு வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணம் தப்பியது தெரியவந்தது. மேலும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை கொண்டு முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்த அடகு கடையின் அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story