துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி


துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு கோவில் கட்டிய விவசாயி
x
தினத்தந்தி 24 Dec 2019 11:00 PM GMT (Updated: 24 Dec 2019 7:15 PM GMT)

துறையூர் அருகே பிரதமர் மோடிக்கு விவசாயி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்.

துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50) விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

சங்கர் சிறுவயது முதலே பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். அவர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பினார்.

வழிபாடு

இந்த நிலையில் துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்துள்ளார். தினமும் அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வருகிறார்.

பா.ஜனதாவின் தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராக இருந்து வரும் சங்கர் இதுபற்றி கூறியதாவது:-பிரதமர் மோடியின் மீது சிறுவயது முதலே கொண்ட அன்பால், எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை.

கொள்கையால் ஈர்க்கப்பட்டு...

தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கினேன். தற்போது, கோவில் கட்டி முடித்துவிட்டேன். கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம். கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர் ஆவார். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story