திருக்கனூர் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த தொழிற்சாலைக்கு `சீல்'


திருக்கனூர் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த தொழிற்சாலைக்கு `சீல்
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர். கடைகள், ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திருக்கனூர்,

திருக்கனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றுச்சூழலை கெடுக்கும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமாருக்கு புகார்கள் வந்தன.

அதைத்தொடர்ந்து ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சாந்தன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் திருக்கனூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.

திருக்கனூர் கடை வீதி, வணிகர் வீதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் நடந்த இந்த சோதனையின்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், பேப்பர், கேரி பேக்குகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.15 ஆயிரம் அபராதம்

ஓட்டல்களில் வாழை இலைக்கு பதில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பேப்பர்கள், மதுபான பார்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கப்கள், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றை பயன்படுத்திய ஓட்டல்கள், விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

தொழிற்சாலைக்கு சீல்

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் திருக்கனூர் அருகே உள்ள கே.ஆர்.பாளையம், கூனிச்சம்பட்டு பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு தொழிற்சாலையில் தடையை மீறி பிளாஸ்டிக் கப், பைகள் உற்பத்தி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் `சீல் வைத்தனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் கூறும்போது, ``தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். அதனை தடுக்க இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. சோதனையின் போது தொடர்ந்து இதுபோல் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


Next Story