கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்து விட்டு வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
பல்லடம் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வர மறுத்ததால் கர்ப்பிணி மனைவியை கழுத்தை அறுத்து விட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழ்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்களும், 5 மகன்களும் உள்ளனர். காத்தவராயன் தனது மனைவி மற்றும் மூத்த மகள் சித்ரா(வயது 23) ஆகியோருடன் பல்லடம் சேடபாளையம் மூலைதோட்டம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். அங்குள்ள நூற்பாலையில் இவர்கள் வேலை பார்த்து வந்தனர்.
அதே நூற்பாலையில் திண்டுக்கல் மாவட்டம், குட்டப்பட்டியை சேர்ந்தவர் ஹென்றி ரொசரியாவும்(25) வேலை பார்த்து வந்தார். ஒரே நூற்பாலையில் வேலை பார்த்ததால் சித்ராவும், ஹென்றி ரொசரியாவும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் அதே பகுதியில் ஒரு வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் சித்ரா கர்ப்பம் ஆனார்.
இதற்கிடையே ஹென்றி ரொசரியா, தனது காதல் மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட விரும்பினார். இதற்காக தனது மனைவியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோம் என்று கூறி இருக்கிறார்.
இதற்கு சித்ராவின் பெற்றோர், மகள் கர்ப்பமாக இருக்கிறாள். இப்போது அவளை அலைய வைக்க வேண்டாம். இங்கேயே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுங்கள் என்று கூறினார்கள். ஆனால் ஹென்றி ரொசரியா தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கூறி உள்ளார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மாமனாரும், மாமியாரும் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த சித்ராவுடன், ஹென்றி ரொசரியா, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது குறித்து பேசி உள்ளார். அதற்கு சித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதால் இப்போது வேண்டாம் என்று கூறி உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஹென்றி ரொசரியா சமையல்அறையில் காய்கறிகள் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மனைவி சித்ராவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்டு வெளியேறியதால் சித்ரா மயங்கி கீழே விழுந்தார்.
ஆத்திரத்தில் தனது மனைவியை கொன்று விட்டோமே. போலீசார் பிடித்து விடுவார்களே என்று ஹென்றி ரொசரியா பீதிக்குள்ளானார். காதல் மனைவியே இறந்து விட்டால் இனி இந்த உலகத்தில் நாம் இருந்து என்ன பயன் என்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் இருந்த விட்டத்தில் மனைவி சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் மயக்கம் தெளிந்து சித்ரா வீட்டிற்குள் தனது கணவர் தூக்குப்போட்டு இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்புறமாக பூட்டப்பட்டு இருந்த கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அவர் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கத்திக்குத்தில் காயம் அடைந்த சித்ராவை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story