உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் சாவு: டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தர்ணா
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்காததால் இளம்பெண் இறந்ததாகக்கூறி, டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் பலவஞ்சிபாளையம் கே.எல்.நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருணா தேவி (21). இந்த நிலையில் கடந்த 13-4-2019 அன்று அருணாதேவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதனால் உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர் அருணாதேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிரசவ வார்டில் இருந்து வந்த அருணாதேவியை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சரியாக கவனிக்காமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக 24-4-2019 அன்று அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது அவரது உறவினர்கள் அங்கிருந்த டாக்டர் மற்றும் செவிலியர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் மீண்டும் உரிய சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக நடந்ததாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து 25-4-2019 அன்று அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அருணாதேவி இறந்தார்.
இந்த நிலையில் அருணா தேவி இறப்பிற்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தான் காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது குழந்தையின் எதிர்கால தேவைக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் எனக்கூறி, அருணாதேவியின் உறவினர்கள் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை முன்பு அமர்ந்து நேற்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். தொடர்ந்து அங்கு மருத்துவமனை சூப்பிரண்டு கோபாலகிருஷ்ணன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story