தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்க வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் பேச்சு


தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்க வேண்டும் - கலெக்டர் சிவன்அருள் பேச்சு
x
தினத்தந்தி 26 Dec 2019 4:00 AM IST (Updated: 25 Dec 2019 8:42 PM IST)
t-max-icont-min-icon

தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகள் வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் செய்யும் முனைவோர்களுக்கும் மற்றும் புதிய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு முகாம் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெற்றது. இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். முகாமில் கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஊதுபத்தி உற்பத்தியில் இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தபடியாக திருப்பத்தூர் பகுதி விளங்கி வருகிறது. இதேபோல கயிறு உற்பத்தி செய்யும் தொழிலிலும் விளங்கி வருகிறது. வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த தொழிலை விரிவுப்படுத்திட தொழில் முனைவோர்கள் மத்திய, மாநில அரசு வழங்கும் மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றிற்கு வங்கியாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பெண்கள் அதிக அளவில் சிறிய மற்றும் பெரிய கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் தற்போது உயர்த்தி வழங்கப்படுகிறது.

தற்போது திருப்பத்தூர் மாவட்டம் உருவாகி செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் படித்த இளைஞர்கள் வேலை வேண்டி அதிக அளவில் மனுக்களை என்னிடம் வழங்கி வருகிறார்கள். அனைவருக்கும் வேலை என்பது சாத்தியமில்லை. இவர்களுக்கு ஒரு சிறப்பு முகாம் நடத்தி தொழில் முனைவோர் பயிற்சியும், வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு திறன் வளர்ப்பு பயிற்சியும் வழங்கிட வங்கியாளர்கள் மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோர்களுக்கு கடன் உதவிகளை வழங்கி திருப்பத்தூர் மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக மாற்றிட மாவட்ட நிர்வாகத்துடன் வங்கியாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஊதுபத்தி தொழில் செய்ய யுவராணி என்ற பெண்ணுக்கு இந்தியன் வங்கி மூலம் 25 சதவீத அரசு மானியத்துடன் ரூ.10 லட்சத்திற்கான கடன் உதவியை கலெக்டர் சிவன்அருள் வழங்கினார். இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவி, தூய நெஞ்சக்கல்லூரி தொலைதூர கல்வி முதல்வர் டேனியல் ஆம்புரோஸ், ஒருங்கிணைப்பாளர் நிக்கோலாபிரகா‌‌ஷ், வங்கி மேலாளர் ராஜசேகர், திருப்பத்தூர் மாவட்ட கயிறு தயாரிப்பு சங்க செயலாளர் பி.வி.பழனி, தலைவர் கே.வெங்கடேசன், என்.நடராஜன், எஸ்.கோபிநாத் உள்பட அனைத்து வங்கி மேலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் முன்னோடி வங்கி அலுவலர் கணே‌‌ஷ் நன்றி கூறினார்.

Next Story