வையம்பட்டி அருகே நள்ளிரவில் பரபரப்பு அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி


வையம்பட்டி அருகே நள்ளிரவில் பரபரப்பு அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை கழுத்தை நெரித்து கொல்ல முயற்சி
x
தினத்தந்தி 25 Dec 2019 11:00 PM GMT (Updated: 25 Dec 2019 5:08 PM GMT)

வையம்பட்டி அருகே அ.தி.மு.க. வேட்பாளரின் மாமனாரை நள்ளிரவில் கழுத்தை நெரித்து மர்ம கும்பல் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் போட்டி காரணமாக அவரை கொலை செய்ய முயன்றனரா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வையம்பட்டி,

திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த மேற்குகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன்(வயது 63). அ.தி.மு.க. பிரமுகர். இவருடைய மகன் ராமசாமி. மருமகள் சுந்தரவள்ளி(32).

இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலில் வையம்பட்டி ஒன்றியத்தின் 14-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக சுந்தரவள்ளி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக ஸ்ரீரங்கனும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

கொலை செய்ய முயற்சி

நேற்று முன்தினம் இரவு தேர்தல் பணிகளை முடித்துவிட்டு, ஸ்ரீரங்கன் வீடு திரும்பினார். வீட்டில் அவர் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் கதவு தட்டப்பட்ட சத்தம் கேட்டு ஸ்ரீீரங்கன் எழுந்து கதவை திறந்தார். அப்போது, அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல், ஸ்ரீரங்கனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவியது.

பின்னர் அவருடைய கழுத்தை கயிற்றால் நெரித்து அந்த கும்பல் கொல்ல முயன்றது. அதற்குள் வீட்டில் இருந்த நாய்கள் குரைத்து சத்தம் போட்டன. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எழுந்து வந்தனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

தேர்தல் போட்டி காரணமா?

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஸ்ரீரங்கனை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேர்தல் போட்டி காரணமாக ஸ்ரீரங்கனை கொலை செய்ய முயன்றனரா? அல்லது வேறுஏதும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நாளை(வெள்ளிக் கிழமை) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வேட்பாளரின் மாமனாரை கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story