திருப்பூரில், பனியன் நிறுவன காவலாளி அடித்துக்கொலை - குன்னூரை சேர்ந்தவர்
திருப்பூர் பனியன் நிறுவன காவலாளியாக வேலைபார்த்து வந்த குன்னூரை சேர்ந்தவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர்,
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே வெலிங்டன் பேலஸ் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 35). இவர் கோவையிலுள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் மூலம் திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த அணைப்புதூரில் உள்ள சமரா எக்ஸ்போர்ட்ஸ் என்ற பின்னலாடை நிறுவனத்தில் தங்கி காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் முருகேசன் அதே நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு ஊழியரான உதயசந்திரனுடன் சேர்ந்து அந்த பின்னலாடை நிறுவனத்திலுள்ள பனியன் துணிகள் மற்றும் ரோல்கள் ஆகியவற்றை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நேற்று முன்தினம் இரவு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் சிலர் சேர்ந்து முருகேசன் மற்றும் உதயசந்திரனை நிறுவனத்தின் மாடியில் வைத்து சரமாரியாக கைகளாலும், ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர். இதில் உதயசந்திரன் அங்கிருந்து தப்பிசென்று விட்டார்.
முருகேசனை சரமாரியாக தாக்கிவிட்டு மாடியிலே விட்டு சென்றுள்ளனர். இந்த விவகாரம் கோவையில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்திற்கு தெரியவந்தது. பின்னர் அவர்கள் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்திற்கு விரைந்து வந்து காயம் அடைந்த முருகேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை முருகேசன் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் முருகேசனை தாக்கிய அதே நிறுவனத்தில் பணியாற்றும் கரூர் மாவட்டம் சரகம்பட்டியை சேர்ந்த சரவணக்குமார் (27), திருப்பூர் ராக்கியாபாளையம் குமரன் காலனியை பகுதியை சேர்ந்த சுதன் (43) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் நடந்த இடத்தை மாநகர துணை கமிஷனர் பத்ரி நாராயணன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பனியன் திருடி விற்பனை செய்ததாக கூறி காவலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story