சுவருக்கும், தூணுக்கும் நடுவில் சிக்கித்தவித்த பள்ளி மாணவன் - தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி மீட்டனர்
செங்குன்றம் அருகே வீட்டின் சுவர் மற்றும் தூணுக்கு நடுவில் சிக்கித் தவித்த பள்ளி மாணவனை, தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி மீட்டனர்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த எம்.ஏ.நகர் அசோக் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் நித்தீஷ் (வயது 12). இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு நித்தீஷ், தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் சுற்றுச்சுவருக்கும், அதன் அருகில் உள்ள தூணுக்கும் இடையே உள்ள சிறிய இடைவெளி வழியாக நித்தீஷ் புகுந்து செல்ல முயன்றான். இதில் அவன், சுவருக்கும்-தூணுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டான். அவனால் வெளியே வரமுடியவில்லை.
இதனால் பயந்துபோன நித்தீஷ் கூச்சலிட்டான். அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர், கடப்பாரையால் சுவரை இடித்து நித்தீசை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதற்குள் பயத்தில் நித்தீஷ் சோர்ந்து போனான்.
இதுபற்றி செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி தேவராசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் நித்தீஷ் சிக்கிக்கொண்ட சுவரின் ஒரு பகுதியை லேசாக சுத்தியலால் அடித்து உடைத்தனர். மேலும் அவன் அணிந்து இருந்த ஆடையையும் கத்திரிக்கோலால் கிழித்து அகற்றினர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நித்தீசை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் சோர்வாக இருந்த நித்தீசுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பிறகு அவன் நலமானான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story