டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு


டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு குறைப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 11:59 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணையில் நீர்இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு கடந்த ஆகஸ்டு மாதம் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இந்த மாதம் முதல் வாரத்தில் இருந்தே டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு குறைவாக தண்ணீரே திறந்து விடப்பட்டு வந்தது.

குறைப்பு

இந்தநிலையில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளதால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை அதிகரித்தது. இதனால் கடந்த 22-ந்தேதி டெல்டா பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தேவை மீண்டும் குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக நேற்று முன்தினம் அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வெளியேறி கொண்டிருக்கிறது. அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 881 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நீர்மட்டம் 118.79 அடியாக இருந்தது.


Next Story