கோவையை அடுத்த வாளையாறில், ரெயிலில் அடிபட்டு காட்டு யானை சாவு
கோவையை அடுத்த வாளையாறில் ரெயிலில் அடிபட்டு காட்டு யானை பரிதாபமாக இறந்தது.
கோவை,
கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு செல்லும் ரெயில் பாதையை வனவிலங்குகள் இரவில் அடிக்கடி கடக்கின்றன. இதனால் அந்த ரெயில் பாதையில் இரவு நேரங்களில் ரெயில்களை குறைவான வேகத்தில் இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் ஏற்கனவே ரெயில்வே துறைக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒரு ரெயில் கோவை நோக்கி வந்தது. அந்த ரெயில் கஞ்சிக்கோடு-பாலக்காடு இடையே வாளையார் அருகே கோட்டைக்காடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயில் பாதையை ஒரு காட்டு யானை கடந்தது. இதை பார்த்த டிரைவர் ரெயிலை பிரேக் போட்டு நிறுத்த முயன்றார். ஆனால் ரெயிலை நிறுத்த முடியவில்லை. இதனால் அந்த ரெயில் யானை மீது மோதி நின்றது. இதில் பலத்த காயம் அடைந்த யானை அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து என்ஜின் டிரைவர் உடனடியாக அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து விட்டு ரெயிலை ஓட்டிச் சென்றார். தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதில் ரெயிலில் அடிபட்டு இறந்தது ஆண் யானை என்றும் அதற்கு 25 முதல் 30 வயது இருக்கும் என்றும் தெரியவந்தது.
பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து யானையின் உடலை வனத்துறையினர் அருகில் உள்ள இடத்தில் புதைத்தனர்.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறியதாவது:-
சம்பவ இடத்தில் வழக்கமாக ரெயில் பாதையை யானைகள் கடப்பது இல்லை. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் தான் யானைகள் ரெயில் பாதையை கடக்கும் பகுதி உள்ளது. யானை இறந்த இடத்தில் தண்டவாளத்தின் இரண்டு பக்கமும் நெல் வயல்கள் உள்ளன. காட்டுப்பகுதி கிடையாது. அந்த இடம் வளைவான பகுதியாகும். இதனால் காட்டு யானை ரெயில் பாதையை கடந்தது டிரைவருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.
ரெயில் பாதையில் யானைகள் கடக்கும் பகுதிகளில் ரெயிலை 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் இயக்க வேண்டும் என்று ஏற்கனவே ரெயில் என்ஜின் டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது யானை அடிபட்ட இடம் யானைகள் இதுவரை ரெயில்பாதையை கடக்காத பகுதியாகும். இனி அந்த இடத்திலும் ரெயிலை குறைவான வேகத்தில் இயக்குமாறு டிரைவர்களை அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story