போலீசார் அதிரடி சோதனை: 313 மது பாட்டில்கள் பறிமுதல்; 7 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தி மது பாட்டில்கள் விற்றதாக 7 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 313 மது பாட்டில்கள், ஒரு கார், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் குமாரவேல் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீசார் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் அதிரடியாக வாகன சோதனை நடத்தினர்.
புதூர்- செங்கோட்டை சாலையில் வாகன சோதனையில் இருந்த போலீசார், அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் சட்ட விரோதமாக 96 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை ஓட்டி வந்த வடக்கு முத்தையாபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 41) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மது பாட்டில்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல் விளாத்திகுளம் மேலக்கரந்தை சாலையில் மது பாட்டில்கள் விற்று கொண்டு இருந்த கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முத்துகுமார் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு பகுதியில் மது பாட்டில்கள் விற்று கொண்டு இருந்த கழுகுமலை மாதாகாலனியை சேர்ந்த பூமிநாதன் (38) என்பவரையும், கோவில்பட்டி- நெல்லை சாலையில் இடைசெவல் கிராமத்தில் மது பாட்டில்கள் விற்ற கயத்தாறு அருகே உள்ள தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்த சண்முகையா (40) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 61 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
எட்டயபுரம் பஸ் நிலையம் அருகே மது பாட்டில்கள் விற்று கொண்டு இருந்த புதூரை சேர்ந்த குணசேகரன்(38) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 32 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தியதாக மந்தித்தோப்பை சேர்ந்த மாரிகண்ணன் (23) என்பவரிடம் இருந்து 48 மது பாட்டில்களும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவில்பட்டி புதுரோடு கடலையூர் ரோடு சந்திப்பில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் விற்றதாக கோவில்பட்டி முத்துநகரை சேர்ந்த பாலகிருஷ்ணன் (43) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 48 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story