பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை முதல் தீவிர சோதனை வாகன பதிவு எண் பலகை விதிமீறலுக்கு ரூ.500 அபராதம்


பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நாளை முதல் தீவிர சோதனை வாகன பதிவு எண் பலகை விதிமீறலுக்கு ரூ.500 அபராதம்
x
தினத்தந்தி 26 Dec 2019 4:00 AM IST (Updated: 26 Dec 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

வாகன பதிவு எண் பலகை விதிமீறலை தடுக்கும் வகையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும நாளை(வெள்ளிக்கிழமை) முதல் தீவிர சோதனை நடத்தப்பட உள்ளது.

பெங்களூரு, 

வாகன பதிவு எண் பலகை விதிமீறலை தடுக்கும் வகையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும நாளை(வெள்ளிக்கிழமை) முதல் தீவிர சோதனை நடத்தப்பட உள்ளது. பதிவு எண் பலகை விதிமீறலுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட உள்ளது என்று போக்குவரத்து துறை கமிஷனர் சிவக்குமார் கூறினார்.

ரூ.500 அபராதம்

பெங்களூருவில் உள்ள தனது அலுவலகத்தில் கர்நாடக போக்குவரத்து துறை கமிஷனர் சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அனைத்து வாகனங்களின் பதிவு எண் பலகைகளிலும் பதிவெண்கள் விதிமுறைகள் படி இடம் பெற்றிருக்க வேண்டும். அதாவது வரையறுக்கப்பட்ட அளவுகளில் தான் பதிவெண்கள் இருக்க வேண்டும். வாகன பதிவெண் பலகைகளில் பதிவெண்களை தவிர்த்து பெயர், சின்னம், கொடி, வசனங்கள் என்று எழுதியிருக்க கூடாது. இதுதொடர்பாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் வருகிற 27-ந் தேதி(அதாவது நாளை) முதல் அதிகாரிகள் குழு தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க உள்ளது. பதிவெண் பலகைகளில் விதிமீறல்கள் இருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

பணி இடமாற்றம்

கடந்த 7 மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக சோதனை நடத்தியதில் 1.62 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இத்தகைய விதிமீறல் மற்றும் வரி ஆகியவற்றின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை ரூ.100.58 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. நடப்பு ஆண்டின் மொத்த வருமானம் ரூ.112.34 கோடியாக உள்ளது.

மேலும் போக்குவரத்து துறை அலுவலகங்களில் நீண்ட ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்பவர்கள் விரைவில் பணி இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story