டி.கே.சிவக்குமாருக்கு வழங்க சித்தராமையா எதிர்ப்பு கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு?
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை டி.கே.சிவக்குமாருக்கு வழங்க சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த பதவி யாருக்கு கிைடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் படுதோல்வி
கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் தினேஷ் குண்டுராவ். கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவியை சித்தராமையாவும் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடம் இன்னும் ஏற்கவில்லை.
டி.கே.சிவக்குமார்
இவர்களில் மக்கள் செல்வாக்கு படைத்த தலைவராக திகழும் சித்தராமையாவின் ராஜினாமா கடிதத்தை நிராகரிக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் தினேஷ் குண்டுராவின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, புதிய தலைவரை நியமிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவக்குமார் நியமிக்கப்படலாம் என்று ெதரிகிறது. இதற்கு சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் மீது ஊழல் புகார் இருப்பதால், கறை படியாத ஒருவருக்கு கட்சி தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று சித்தராமையா தனது கருத்தை தெரிவித்துள்ளார். டி.கே.சிவக்குமார் சிறை சென்று வந்தாலும், பலம் வாய்ந்த ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த அவர், மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக திகழ்கிறார்.
இணைந்து பணியாற்ற...
கட்சி மேலிடம் வழங்கும் பணியை வெற்றிகரமாக முடித்து காட்டுபவர் என்ற நற்பெயரும் அவருக்கு உண்டு. டி.கே.சிவக்குமாருக்கு பதவி வழங்கினால் தனது பேச்சை கேட்கமாட்டார் என்று சித்தராமையா கருதுகிறார். மேலும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற சித்தராமையாவின் திட்டத்திற்கு டி.கே.சிவக்குமார் குறுக்கே நிற்பார் என்று அவர் நினைக்கிறார்.
டி.கே.சிவக்குமாரோ முதல்-மந்திரியாக வேண்டும் என்ற கனவில் இருக்கிறார். அதனாேலயே சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதனால் டி.கே.சிவக்குமாருக்கு தலைவர் பதவி வழங்கினால், அவரும், சித்தராமையாவும் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ண பைரேகவுடா
அவ்வாறு சிக்கல் ஏற்பட்டால் அது கட்சியை பாதிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து பணியாற்றினால் மட்டுமே, கட்சியை வளர்க்க முடியும் என்பது மூத்த தலைவர்களின் ஆலோசனையாக உள்ளது.
அதனால் மாநில காங்கிரஸ் தலைவராக பெரும்பான்மை சமூகமாக திகழும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்.பி.பட்டீலுக்கு வழங்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தி வருகிறார். ஒருவேளை ஒக்கலிகர் சமூகத்திற்கு பதவி வழங்குவதாக இருந்தால், ஊழல் கறை படியாத முன்னாள் மந்திரி கிருஷ்ண பைரேகவுடாவை நியமிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தலைவர்களுக்கு அழுத்தம்
இதற்காக எம்.பி.பட்டீல், கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு, காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மாநில காங்கிரஸ் தலைவர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.
Related Tags :
Next Story