மானியத்தில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


மானியத்தில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 26 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் மானிய உதவியுடன் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 

மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் வேளாண் எந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்குதல் மற்றும் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையம் அமைக்கும் திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் ரூ.5 கோடியே 56 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் டிராக்டர்கள், பவர் டிரில்லர், சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, நிலம் சமன் செய்யும் கருவி, தட்டை வெட்டும் கருவி, விசைத் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் தெளிப்பான், டிராக்டரால் இயங்கும் துகளாக்கும் கருவி மற்றும் மனித சக்தியால் இயக்கப்படும் கருவிகள் ஆகிய வேளாண் எந்திரம் மற்றும் கருவிகளை விவசாயிகள் வாங்கி பயனடையலாம். இந்த திட்டத்தில் வேளாண் எந்திரங்களை மானியத்தில் பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் தனது ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் அவரது விண்ணப்பம் மத்திய அரசின் இணைய தளத்தில் இணைக்கப்படும்.

இந்த திட்டத்தில் சிறு, குறு, ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு 35 முதல் 50 சதவீதம் வரையும், இதர விவசாயிகளுக்கு 25 முதல் 40 சதவீதம் வரை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானிய தொகை இவற்றில் எது குறைவாக உள்ளதோ அந்த தொகை மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் அதிக விலை உள்ள உயர் தொழில் நுட்ப எந்திரங்களை வாங்க அதிக பட்சமாக ரூ.4 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் இது தவிர அதிக விலை உள்ள வேளாண் எந்திரங்களை விவசாயிகள் குறைந்த வாடகையில் பெறுவதற்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்கும் மையங்களை விவசாயிகள் விவசாய குழுக்கள் அல்லது தொழில் முனைவோர் ஆகியோர் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறாக ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானிய அடிப்படையில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இது தொடர்பான மேலும் விவரங்களை வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அல்லது உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story