தொப்பூர் கணவாயில் தொடர் விபத்து: டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


தொப்பூர் கணவாயில் தொடர் விபத்து: டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 26 Dec 2019 2:02 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் பஸ், லாரிகள் மோதிய தொடர் விபத்தில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நல்லம்பள்ளி,

கிரு‌‌ஷ்ணகிரி பக்கம் இருந்து நேற்று காலை ஒரு பஸ் 25 பயணிகளுடன் சேலம் நோக்கி சென்றது. இந்த பஸ்சை நாமக்கல்லை சேர்ந்த செல்வராஜ் (வயது59) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக மூர்த்தி (52) உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் சென்ற போது பின்னால் வந்த லாரி திடீரென பஸ் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு எதிரே சேலம்- தர்மபுரி மார்க்கமாக சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. மேலும் பஸ் மீது மோதிய லாரி சாலையோரம் இருந்த 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த தொடர் விபத்தில் பயணிகள் சவுந்தர்யா(20), சிவானி(20), திலகவதி(32) மற்றும் லாரி டிரைவர்கள் ரவி, காளிமுத்து, குபேந்திரன் மற்றும் பஸ் டிரைவர்கள் செல்வராஜ், மூர்த்தி ஆகிய 8 பேரும் படுகாயம் அடைந்தனர். தொப்பூர் கணவாயில் தொடர் விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 9 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் லாரிகள், பஸ்சை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். தொடர் விபத்தால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால் வாகனங்கள் தொப்பூர் கணவாயில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story