மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் ஜனாதிபதியிடம், நாராயணசாமி கோரிக்கை


மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் ஜனாதிபதியிடம், நாராயணசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 26 Dec 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி கோரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவைக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினேன். அப்போது கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தேன். அதாவது, புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். கடந்த 1987-ம் ஆண்டு முதல் புதுவை சட்டசபையில் இதுதொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதை எடுத்துக் கூறினேன்.

மேலும் புதுவை மாநிலத்தை 15-வது நிதிக்குழுவில் சேர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தினேன். நிதிக்குழுவில் மாநிலங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கு 42 சதவீத நிதியும், யூனியன் பிரதேசங்களுக்கு 90 சதவீத நிதியும் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் நிதிக்குழுவில் இடம்பெறாததால் புதுவைக்கு 26 சதவீத நிதி மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே புதுவை மாநிலத்தை நிதிக்குழுவில் சேர்க்க உத்தரவிட கோரிக்கை வைத்தேன்.

வெளிச்சந்தை கடன்

வெளிச்சந்தையில் கடன் வாங்கும் அளவு உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் அளவுக்கு உள்ளது. ஆனால் நாம் 22.4 சதவீதம்தான் கடன் வாங்கி உள்ளோம். அதன்படி ரூ.700 கோடி வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய அரசு அனுமதி வழங்க உத்தரவிட கேட்டுக்கொண்டேன்.

டெல்லி அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஓய்வூதிய நிதியை மானியமாக வழங்குகிறது. அதேபோல் புதுவை அரசு ஊழியர்களுக்கும் வழங்கக் கேட்டுக்கொண்டேன். 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல் படுத்தியதற்காக ஆண்டுக்கு ரூ.550 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்த நிதியை மத்திய அரசு 3 ஆண்டுகளாக வழங்கவில்லை. அதை வழங்க நிதி அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய உதவிட கேட்டேன்.

கடன் ரத்து

தனிக்கணக்கு ஆரம்பிக்கும் முன்பு மத்திய அரசிடம் நாம் ரூ.2 ஆயிரத்து 177 கோடி கடன் பெற்றிருந்தோம். அதில் தற்போது ரூ.1000 கோடிதான் பாக்கி உள்ளது. மீதியுள்ள கடன் ரூ.1000 கோடியை ரத்துசெய்ய கேட்டேன்.

ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 10 சதவீத நிதியை உயர்த்தி தருகிறது. ஆனால் புதுவை மாநிலத்துக்கு கடந்த 3 ஆண்டாக 5 சதவீத உயர்வுதான் அளிக்கப்படுகிறது. இது புதுவையை வஞ்சிக்கும் செயல். அதனை 10 சதவீதமாக உயர்த்திதர கேட்டுக்கொண்டேன்.

போட்டி அரசாங்கம்

புதுவை மாநிலத்துக்கு கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள கிரண்பெடி மாநில வளர்ச்சிக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை. மாநில அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பதில்லை. மாநில அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்துகிறார். அதிகாரிகளை செயல்படவிடாமல் தடுப்பதும், மிரட்டுவதுமான செயல்களில் ஈடுபடுகிறார். தன்னிச்சையாக கோப்புகளை பார்த்து அரசின் பரிந்துரைகளை மீறி உத்தரவிடுகிறார்.

டெல்லி சென்று அதிகாரிகளை சந்தித்து புதுச்சேரிக்கு நிதி கொடுக்கக்கூடாது என்கிறார். தொடர்ந்து புதுவை மாநில வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்து வருகிறார். போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார். முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்கு தெரியாமல் விசாரணைகளை வைக்கிறார். கோர்ட்டு தீர்ப்பினையும் அவமதிக்கிறார்.

கவர்னரை திரும்பப்பெற வேண்டும்

இதுதொடர்பாக பிரதமர், உள்துறை மந்திரியிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவர்னர் கிரண்பெடியை திரும்பப்பெற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். ஜனாதிபதி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story