‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து சிவசேனா சாடல் ‘துப்புரவு தொழிலாளர்கள் எமனின் தூதர்களாக மாறிவிட்டனர்’


‘தூய்மை இந்தியா’ திட்டம் குறித்து சிவசேனா சாடல் ‘துப்புரவு தொழிலாளர்கள் எமனின் தூதர்களாக மாறிவிட்டனர்’
x
தினத்தந்தி 26 Dec 2019 4:30 AM IST (Updated: 26 Dec 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை சாடும் வகையில் துப்புரவு தொழிலாளர்கள் எமனின் தூதர்களாக மாறி விட்டனர் என்று சிவசேனா கூறி உள்ளது.

மும்பை,

பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை சாடும் வகையில் துப்புரவு தொழிலாளர்கள் எமனின் தூதர்களாக மாறி விட்டனர் என்று சிவசேனா கூறி உள்ளது.

துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பு

மனித கழிவுகளை மனிதரே அள்ள தடை விதிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்றைய நாட்களிலும் பாதாள சாக்கடைகள் மற்றும் கழிவு நீர் தொட்டிகளுக்குள் இறங்கி துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் கூட மும்பை கோவண்டியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய 3 துப்புரவு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில், பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை சாடும் வகையில் கூறியிருப்பதாவது:-

தூய்மையின் தூதர்கள்

பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகள் போன்றவை துப்புரவு தொழிலாளர்களுக்கு எரிவாயு அறைகளாக மாறிவிடுகின்றன. இன்று அரசு முதல் சமூகம் வரை அனைவரும் தூய்மையின் தூதர்களாக மாறிவிட்டனர். ஆனால் உண்மையான தூய்மை தூதர்களான துப்புரவு தொழிலாளர்கள் எமனின் தூதர்களாக மாறிவிட்டனர். ஆனால் நிர்வாகமோ அல்லது சமூகமோ அவர்களின் பாதுகாப்பு பிரச்சினையை உணர்ந்துகொண்டதாக தெரியவில்லை.

மும்பையில் மட்டுமல்ல, மராட்டியத்தின் தானே, கல்யாண், நாசிக் மற்றும் குஜராத், தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற கொடிய சம்பவங்கள் நடக்கின்றன.

கோபம், வேதனை

கடந்த சில ஆண்டுகளில் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை அடைப்புகளில் தவறிவிழுந்தும் பலர் உயிரை இழந்துள்ளனர். ஆனால் இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்களில் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களின் கோபத்தையும், வேதனையையும் யாராலும் புரிந்துகொள்ள முடியுமா?

சிவசேனாவும் மும்பை மாநகராட்சியை ஆட்சி செய்து வருகிறது. ஆனால் தூய்மை குறித்த எந்த பிரசாரத்திற்கும் பெயரிட்டுக்கொள்ளவில்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளது.

2014-ம் ஆண்டு முதல் தடவை பிரதமராக பதவி ஏற்ற மோடி ‘தூய்மை இந்தியா’ என்ற தனது கனவு திட்டத்தை தொடங்கி தூய்மை பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story