சிதம்பரத்தில் காணாமல்போன சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்


சிதம்பரத்தில் காணாமல்போன சாலையால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 25 Dec 2019 10:30 PM GMT (Updated: 25 Dec 2019 11:56 PM GMT)

சிதம்பரத்தில் காணாமல் போன சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள்.

சிதம்பரம்,

உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைய பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும். இங்கு வெளிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இதனால் நகரம் எப்போதும் பரபரப்புடன் இயங்கும். ஆனால் நகரில் சாலை வசதியை நினைத்தால் தான் வேதனை தருகிறது.

நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக நகரின் பிரதான சாலைகள் மட்டுமின்றி அனைத்து தெருக்களிலும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதைவிட மின்கேபிள் பதிக்கும் திட்ட பணியும் நகரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காகவும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

குறிப்பாக படித்துறை இறக்கம், எஸ்.பி.கோவில் தெரு, காந்தி சிலை பஸ் நிலையம் செல்லும் ரோடு, விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெரு, பச்சையப்பன் பள்ளி தெரு, மேலவீதி, காமாட்சி அம்மன் கோவில் தெரு, இளமையாக்கினார் கோவில் தெரு, பாவா தெரு, வெங்கான் தெரு, புது தெரு மாலைகட்டி தெரு, பேட்டை, தாலுகா புறவழிச்சாலை ரோடுகள் என்று நகரில் முக்கிய சாலைகள் அனைத்தும் தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.

குண்டும், குழியுமாக மண் சாலையாகவே காட்சி தருகின்றன. இதன் வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியே சென்று வருகின்றனர். அதோடு அவ்வப்போது விபத்துக்களும் நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க சாலையில் இருந்து பறக்கும் புழுதியால், பாதசாரிகள் மற்றும் சாலையோரம் வசித்து வரும் மக்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அனைத்து தரப்பு மக்களையும் இன்னலுக்கு உள்ளாக்கி இருக்கும் பள்ளங்களை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தை முன்னெடுத்து வந்த போதிலும் அதற்கான பணிகள் ஏதும் தொடங்குவதற்கான அறிகுறிகள் கூட இதுவரை தென்படாத நிலையில் இருப்பது வருத்தத்துக்கு உரிய ஒன்றாகும். எனவே தற்போதைய சூழ்நிலையில் புதிய தார் சாலை அமைக்க முன்வராவிட்டாலும், சாலையில் உள்ள பள்ளங்களை தற்காலிகமாக சீரமைத்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story