மண் அரிப்பு ஏற்பட்டு ஊட்டி-கூடலூர் சாலை துண்டிக்கப்படும் அபாயம் - வாகன ஓட்டிகள் பீதி
மண் அரிப்பு ஏற்பட்டு ஊட்டி-கூடலூர் சாலை துண்டிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பீதியடைந்து உள்ளனர்.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த ஆகஸ்டு மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், மரங்கள் முறிந்து விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தடுப்புச்சுவர் கட்டப்பட்டு வருவதுடன், சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கனமழையின்போது, ஊட்டி-கூடலூர் சாலை சோலூர் சந்திப்பு பகுதியில் தடுப்பணை நிரம்பி வெளியேறிய வெள்ளம் சாலையோரத்தில் இருந்த மண்ணை அரித்துக்கொண்டு சென்றது. இதனால் அந்த சாலை அந்தரத்தில் தொங்குகிறது. மேலும் சாலை துண்டிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. சாலையின் இருபுறத்திலும் யாரும் செல்லாமல் இருக்க கயிறு கட்டப்பட்டு உள்ளது.
அதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பீதியுடன் சென்று வருகின்றனர். அப்பகுதி இரண்டு சாலைகளை இணைக்கும் பகுதியாக உள்ளது. 4 மாதங்களை கடந்தும் இதுவரை சீரமைக்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
சுற்றுலா நகரமான ஊட்டியில் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய சாலையாக இருக்கிறது. ஊட்டியில் இருந்து கோழிக்கோடு, நிலாம்பூர், மைசூரு போன்ற இடங்களுக்கு கூடலூர் வழியாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என 3 மாநில அரசு பஸ்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அந்த சாலை வழியாக ஊட்டிக்கு வருகை தருகின்றனர். மேலும் கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஊட்டி-கூடலூர் சாலை சோலூர் சந்திப்பு பகுதியில் சாலையின் ஒருபுறம் பெயர்ந்து பல நாட்களாகியும் இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது. சோலூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மற்றும் ஊட்டி, கூடலூருக்கு செல்லும் சாலையை இணைக்கும் பகுதியாக இருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இரண்டு சாலைகளிலும் அரிப்பு ஏற்பட்டு அந்தரத்தில் தொங்குகிறது. அந்த சாலையை கடந்து செல்லவே அச்சமாக உள்ளது. விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது. எனவே, சாலை பெயர்ந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊட்டி-கூடலூர் சாலையில் பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனையும் மறுசீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story