அடுக்குமாடி குடியிருப்பில் முன்விரோதத்தில் தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி சாவு


அடுக்குமாடி குடியிருப்பில் முன்விரோதத்தில் தாக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 27 Dec 2019 3:45 AM IST (Updated: 26 Dec 2019 11:03 PM IST)
t-max-icont-min-icon

சென்னை தியாகராயநகரில் உள்ள அடிக்குமாடிக்குடியிருப்பில் முன்விரோதத்தில் தாக்கப்பட்ட காவலாளி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை சாலையில் பிரபல அடுக்குமாடிக்குடியிருப்பு உள்ளது. இங்கு ஆட்கள் யாரும் குடியிருக்கவில்லை. காலியாக உள்ளது. செல்வராஜ் என்பவர் இந்த அடுக்குமாடிக்குடியிருப்பை பராமரித்து வந்தார். இங்கு சரவணன் (வயது 41) என்பவர், முதலில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் குடிபோதையில் அடிக்கடி ரகளையில் ஈடுபட்டார். இதனால் இவரை வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சரவணனுக்கு பதிலாக ரத்னகுமார்(58) என்பவர் காவலாளியாக நியமிக்கப்பட்டார். அரும்பாக்கத்தை சேர்ந்த ரத்னகுமாருக்கு மனைவியும் மகளும் உள்ளனர். அவர்களோடு சேர்ந்த வாழாத ரத்னகுமார், தான் வேலை பார்த்த அடுக்குமாடிக்குடியிருப்பிலேயே தங்கியிருந்தார்.

வேலையை இழந்த சரவணன், அடிக்கடி போதையில் வந்து, ரத்னகுமாரிடம் தகராறு செய்வார். சம்பவத்தன்று இரவு, போதையில் வந்த சரவணன், ரத்னகுமாரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. தகராறு மோதலாக முற்றி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர்.

சண்டையில் சரவணன், ரத்னகுமாரை கட்டையால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ரத்னகுமார், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ரத்னகுமார் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் பாண்டிபஜார் போலீசார் முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். ரத்னகுமார் இறந்ததையொட்டி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சரவணன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Next Story