5 கிராமங்களை திருக்கோவிலூர் தாலுகாவில் இணைக்கக்கோரி - இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
5 கிராமங்களை திருக்கோவிலூர் தாலுகாவில் இணைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கோவிலூர்,
விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் தாலுகா இணைக்கப்பட்டது. இருப்பினும் திருக்கோவிலூர் தாலுகாவில் இருந்த வடக்குநெமிலி, அத்தண்டமருதூர், வடமருதூர், முதலூர், ஆவிகொளப்பாக்கம் ஆகிய கிராமங்களை பிரித்து அதனை திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவுக்கு மாற்றி விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் எங்களுக்கு திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம்தான் அருகில் உள்ளது. எனவே அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவது தொடர்பாக நாங்கள் திருக்கோவிலூர் சென்றுவருவது தான் எளிதாக இருக்கும். அதனால் வடக்குநெமிலி உள்ளிட்ட 5 கிராமங்களையும் மீண்டும் திருக்கோவிலூர் தாலுகாவில் சேர்த்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வடக்குநெமிலி உள்பட 5 கிராமங்களையும் திருக்கோவிலூர் தாலுகாவில் இணைக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வடக்குநெமிலியில் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் ராமசாமி, ஒடுக்கப்பட்ட வாழ்வுரிமை சங்க மாவட்ட பொருளாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் வடக்குநெமிலி, அத்தண்டமருதூர், வடமருதூர், முதலூர், ஆவிகொளப்பாக்கம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story