மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி பா.ஜனதா அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி மந்திரி சி.டி.ரவி குற்றச்சாட்டு


மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி பா.ஜனதா அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி மந்திரி சி.டி.ரவி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 Dec 2019 3:30 AM IST (Updated: 26 Dec 2019 11:31 PM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி, பா.ஜனதா அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக மந்திரி சி.டி.ரவி குற்றம்சாட்டினார்.

மங்களூரு, 

மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி, பா.ஜனதா அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி செய்வதாக மந்திரி சி.டி.ரவி குற்றம்சாட்டினார்.

சுற்றுலாத்துறை மந்திரி சி.டி.ரவி மங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரகசிய ஒப்பந்தம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் சேதம் விளைவித்த சொத்துகளுக்கு ஈடுகட்டும் வகையில் போராட்டக்காரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். உத்தரபிரதேச அரசு எடுத்த நடவடிக்கையை போல் கர்நாடக அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து முதல்-மந்திரியிடம் வலியுறுத்துவேன்.

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் அப்பாவிகள் என்றால் நிவாரணம் வழங்குவோம். அவர்கள் குற்றவாளிகள் என்றால் நிவாரணம் வழங்க வேண்டுமா?. இந்த விஷயத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். பி.எப்.ஐ. மற்றும் எஸ்.டி,பி.ஐ. முஸ்லிம் அமைப்புகளுடன் காங்கிரஸ் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

மோசமான குணம்

மாநிலத்தில் கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் மாநில பா.ஜனதா அரசை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. போராட்டம் என்ற பெயரில் மாநிலத்தில் அமைதியை குலைக்க காங்கிரஸ் முயற்சி செய்கிறது. 144 தடை உத்தரவு இருந்தும் போராட்டக்காரர்கள் வீதிக்கு வந்தது ஏன்? மங்களூரு கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு செய்த சதி செயல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் தான் மங்களூருவில் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தில் போலீசார் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

முதல்-மந்திரி எடியூரப்பா எல்லாவற்றையும் தானாக தீர்மானம் செய்கிறார் என்று சித்தராமையா கூறியுள்ளார். எடியூரப்பாவை பற்றி பேச சித்தராமையாவுக்கு தகுதி இல்லை. சீரபாக்யா, அன்னபாக்யா உள்பட அனைத்து திட்டங்களை முதல்-மந்திரி எடியூரப்பா சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். சந்தேகப்படுவது காங்கிரசின் மோசமான குணம். தேர்தலில் தோற்கும்போது, மின்னணு வாக்கு எந்திரங்கள் மீது அக்கட்சி சந்தேகம் எழுப்பியது. இப்போது மங்களூரு வன்முறையில் போலீசார் மீது அந்த கட்சி சந்தேகப்படுகிறது.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Next Story