சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நாகையில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி


சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு நாகையில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் நேற்று சுனாமி 15-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

நாகப்பட்டினம்,

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக ஏற்பட்ட சுனாமி பேரலை நாகை மாவட்டத்திற்கு ஆறாத வடுவை உண்டாக்கியது. இந்த தினம் கருப்பு ஞாயிறு நாளாக வரலாற்றில் பதிந்து விட்டது. வழக்கமாக குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் கடல் அலை, டிசம்பர் 26-ந் தேதி மட்டும் கோரத்தாண்டவம் ஆடி விட்டது.

இதன் விளைவு 6 ஆயிரத்து 60 உயிர்கள், அதன் சொந்த,பந்தங்களை விட்டு பிரிந்து விட்டது. இந்த நாளை நாகை மாவட்ட மக்கள் கருப்பு ஞாயிறு என்றே அழைக்கின்றனர். நீங்காத சோகத்தின் நினைவு நாள் 15-வது ஆண்டாக நேற்று நாகை மாவட்டம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

தர்ப்பணம்

சுனாமி எனும் ஆழிப்பேரலையால் நாகை மாவட்டத்தின் 64 மீனவ கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மீன்பிடி தளவாடங்கள், வீடுகள் என அனைத்து உடமைகளையும் இழந்த மீனவ கிராம மக்கள் கண்ணீரும், கவலையுமாக நின்ற காட்சி அனைத்து தரப்பினரையும் வாட்டி வதைத்தது.

கடலையே கடவுளாக வழிபட்டு, நண்பனாக நினைத்து விளையாடி மகிழ்ந்த கடலோர மக்கள், அந்த கடலிலேயே தங்கள் உறவுகளை பறிகொடுத்த சோகத்தை ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரும் வகையில் நாகை நம்பியார்நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நாகூர் பட்டினச்சேரி, சாமந்தான்பேட்டை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் தர்ப்பணம் செய்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் கடலோர பகுதிகளில் மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மவுன ஊர்வலம்

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் கிராமம் சார்பில் அங்குள்ள நினைவு சின்னத்தில் பொதுமக்கள் சார்பில் ஆத்மசாந்தி யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து கீச்சாங்குப்பம் பொதுமக்கள் நினைவு தூணில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவ- மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது.

பின்னர் பள்ளியில், சுனாமியில் உயிரிழந்த மாணவ, மாணவிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கு ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் அக்கரைப்பேட்டை மீனவ கிராமம் சார்பில் டாடா நகர் சுனாமி குடியிருப்பில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அக்கரைப்பேட்டை கடற்கரையில் நிறைவடைந்தது. பின்னர் அங்குள்ள நினைவு தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு

இதேபோல நாகூர் பட்டினச்சேரி ஸ்ரீராமர் கோவிலில் இருந்து பட்டினச்சேரி, சம்பாத்தோட்டம் சுனாமி குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மவுன ஊர்வலமாக பட்டினச்சேரி கடற்கரைக்கு சென்றனர். பின்னர் அங்கு மெழுகுவர்த்தி ஏற்றி சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு தூணில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுனாமியால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் தங்கி பயிலும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வேளாங்கண்ணி

கிறிஸ்துமஸ் கொண்டாட வேளாங்கண்ணி வந்த சுற்றுலா பயணிகளில் ஏராளமானவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக வேளாங்கண்ணி பஸ் நிலையத்தில் இருந்து பேராலய அதிபர் பிராபகர் தலைமையில் பொதுமக்கள் மவுன ஊர்வலமாக சென்று நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு தாங்கள் இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். செருதூர் மீனவ கிராமத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

வேதாரண்யம்

வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம் ஆகிய மீனவ கிராம மக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலம் சென்று கடற்கரையை அடைந்தனர். அங்கு சுனாமியால் இறந்த தங்களது உறவினர்களின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஊர்வலமாக சென்ற கடலில் பால் ஊற்றி மல்ர தூவினார். பின்னர் சுனாமி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி மவுன அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி நினைவு நாளான நேற்று மீனவ பெண்கள் கடலை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாகவே இருந்தது. சுனாமி பேரலை தாக்கி 15 ஆண்டுகள் கடந்து இருந்தாலும், மீனவர்கள் தங்களது உறவினர்களை இழந்த தாக்கதில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே சொல்லலாம்.


Next Story