உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெட்டிகள் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி


உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெட்டிகள் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி
x
தினத்தந்தி 27 Dec 2019 4:30 AM IST (Updated: 27 Dec 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெட்டிகள் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 32 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 557 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 139 மண்டல அலுவலர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 1,771 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு 11 ஆயிரத்து 235 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.

போலீஸ் பாதுகாப்புடன்

இந்தநிலையில் முதல் கட்ட தேர்தல் 5 ஒன்றியங்களில் இன்று நடைபெறுவதையொட்டி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப்பதிவு பெட்டி, வாக்கு சீட்டு, கையில் அடையாள குறி வைக்க மை மற்றும் தேர்தலுக்கான தேவையான அனைத்து பொருட்களும் சாக்கு மூட்டையில் சேகரிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு வேன்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 150 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு பெட்டி, வாக்குச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணிகளை உதவி கலெக்டர் ஜெயபிரீதா, தாசில்தார் நக்கீரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் மனோன்மணி ஆகியோர் பார்வையிட்டனர்.

மன்னார்குடி

இதேபோல் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 51 ஊராட்சிக்கு உட்பட்ட 213 வாக்குச்சாவடிகளில் 22 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 51 ஊராட்சி மன்ற தலைவர்கள், 378 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு (11-வது வார்டு மாவட்ட ஊராட்சி அ.தி. மு.க. வேட்பாளர் மரணமடைந்ததால் ஒத்திவைக்கப்பட்டது) ஆகியவற்றுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வாக்குப்பதிவு நடக்கும் 213 வாக்குப்பதிவு மையங்களுக்கான வாக்குப்பெட்டிகள், வாக்கு சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் நேற்று காலை மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டன. இதனை மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தாசில்தார் கார்த்தி, தேர்தல் நடத்தும் அலுவலர்களான வட்டார வளர்ச்சி அலுவலர் ஞானம், கூட்டுறவு துணைப்பதிவாளர் பாத்திமா சுல்தானா, மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story