பழனி காந்தி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்
பழனி காந்தி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்புகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பழனி,
பழனி குளத்துரோடு ரவுண்டானாவில் இருந்து காந்தி மார்க்கெட் வழியாக பெரிய கடைவீதி பகுதிக்கு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக காந்தி மார்க்கெட், கடைவீதி, பெரியநாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில் பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை வழியாக மானூர், தாராபுரம் செல்லும் பஸ்கள் சென்று வந்தன. மார்க்கெட் இருப்பதால் நெரிசல் ஏற்பட்டு வந்ததை அடுத்து அந்த வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் தற்போது காந்தி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்பு தலைவிரித்தாடுகிறது. சாலையோரம் ஏராளமான வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர். அதுமட்டுமின்றி மார்க்கெட் பகுதிக்கு வரும் மக்களும் தாங்கள் வரும் வாகனங்களை ஆங்காங்கே சாலையில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.மேலும் காந்தி மார்க்கெட் முன்புற பகுதியில் வாழை இலை கழிவுகளை சிலர் கொட்டுகின்றனர். இதனை தின்பதற்காக அந்த பகுதிக்கு ஏராளமான மாடுகள் வருகின்றன. சில நேரங்களில் அவை சாலையோரம் படுத்துவிடுகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், அங்கு விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.
எனவே காந்தி மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், வாகனங்களை சாலையோரம் நிறுத்த சரியான வரையறை வகுக்க வேண்டும். இல்லையென்றால் போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
இதேபோல் குளத்து ரவுண்டானாவில் இருந்து பஸ்நிலையம் செல்லும் திண்டுக்கல் சாலையின் ஓரத்தில் மக்கள் நடந்து செல்வதற்கென நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து சாலை வரை கடையை நீட்டிப்பு செய்துள்ளனர்.
இதனால் மக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story