தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் - பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
இன்று (வெள்ளிக்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்து 537 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இன்றும் (வெள்ளிக்கிழமை), வருகிற 30-ந் தேதியும் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் ஆகிய 7 பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதில் உள்ள 1,542 பதவிகளில், 416 பதவிகளுக்கு நபர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 1,126 பதவிகளுக்கு 3 ஆயிரத்து 561 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக, மொத்தம் 824 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 162 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. இதில் 78 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்படுகிறது. 40 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு செய்யப்படுகிறது. 44 வாக்குச்சாவடிகளில் நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் மொத்தம் 6 ஆயிரத்து 695 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நேற்று காலையில் பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
தேர்தலுக்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள், அழியாத மை, படிவங்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் தனித்தனியாக பூத் வாரியாக பிரித்து அனுப்பும் பணி அந்தந்த உதவி தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன், யூனியன் அலுவலகங்களில் இருந்து மண்டல குழுவினர் ஓட்டுப்பதிவுக்கான பொருட்களை ஏற்றி சென்றனர். இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத் சிங் கலோன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்குச்சீட்டில் சின்னம் மட்டுமே இடம் பெற்று இருக்கும். ஆகையால் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்களோ, அவர்களின் சின்னத்தை மறவாமல் வைத்து வாக்களிக்க வேண்டும்.
மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்கு சேகரிப்பது தேர்தல் சட்டத்தின் கீழ் குற்றம் ஆகும். அவ்வாறு வாக்கு சேகரிப்பவர்களை போலீசார் பிடியாணை இன்றி கைது செய்து வழக்கு தொடரலாம். வாக்களார்கள் தவிர எந்தவொரு நபரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து உரிய அனுமதி சீட்டு பெறாமல் வாக்குச்சாவடிக்குள் நுழையக்கூடாது. எந்த நபரும் வாக்குச்சாவடிகளின் உள்ளேயோ, அவற்றின் நுழைவு வாயிலிலோ அல்லது அருகிலோ அமைந்துள்ள பொது அல்லது தனியார் இடத்திலோ மெகாபோன் அல்லது ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.
தேர்தல் பணியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களது பணிக்கு இடையூறு செய்யும் வகையில் வாக்குச்சாவடிக்கு உள்ளேயோ அல்லது அதன் அருகிலோ ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது. வாக்குச்சாவடி அலுவலரின் சட்ட ரீதியான உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுக்கும் எந்த ஒரு நபரும் போலீசாரால் வாக்குச்சாவடியில் இருந்து அகற்றப்படுவார். வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டு எடுத்து செல்ல அல்லது கவர்ந்து செல்ல முயற்சிக்கும் எந்த ஒரு நபரும் தண்டிக்கப்படுவார்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
தேர்தல் நடைபெறும் 7 யூனியன்களிலும் மொத்தம் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாகன ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். பதற்றம் நிறைந்த யூனியன்களில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story