வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் - தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் கலெக்டரிடம் மனு


வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் - தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 27 Dec 2019 3:45 AM IST (Updated: 27 Dec 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. ஆகியோர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை தனித்தனியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-

ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்றும் (வெள்ளிக்கிழமை), வருகிற 30-ந் தேதியும் நடக்கிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி வருகிற 2-ந் தேதி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் ஒன்றியம் வாரியாக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் வெப் கேமரா வைக்கப்பட வேண்டும். உரிய அடையாள அட்டையுடன் கூடிய முகவர்களை மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் தலைவருக்கான வாக்குகள் எண்ணி முடித்து, முடிவுகளை அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கி சம்பந்தப்பட்ட ஊராட்சி முகவர்கள் வெளியே சென்ற பின்னர்தான் அடுத்த பஞ்சாயத்தின் வாக்கு எண்ணும் பணி தொடங்க வேண்டும்.

இதேபோல் பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிக்கும் ஒரு வார்டு வாக்குகளை எண்ணி முடிவை அறிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி சம்பந்தப்பட்டவர்களை வெளியே அனுப்பிய பிறகு தான் அடுத்த வார்டுக்கான வாக்கு எண்ணும் பணியை தொடங்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த உத்தரவை சரியான முறையில் அமல்படுத்த தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு பொறுப்புகளில் உள்ளவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர் உள்ளிட்ட அரசு பதவிகளில் இருப்பவர்களை வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களிலும் அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். அப்போது, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவனுடன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தேர்தல் பொறுப்பாளர் செங்கை சிவா மற்றும் நிர்வாகிகளும், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிரு‌‌ஷ்ணனுடன் சண்முகையா எம்.எல்.ஏ., தேர்தல் பொறுப்பாளர் கார்த்தி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

Next Story