திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் - சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்தனர்


திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் - சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்தனர்
x
தினத்தந்தி 27 Dec 2019 4:00 AM IST (Updated: 27 Dec 2019 12:49 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல், பழனி, கொடைக்கானலில் தோன்றிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர்.

திண்டுக்கல், 

சூரியன், நிலவு (சந்திரன்) மற்றும் பூமி ஆகிய 3-ம் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவே நிலவு வரும். அந்த நேரத்தில் பூமியில் இருந்து சூரியனை பார்க்க முடியாதபடி நிலவு மறைத்துவிடும். இந்த நிகழ்வு சில நிமிடங்கள் வரை நீடித்து இருக்கும்.

இந்த நேரத்தில் சூரியனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கருப்பு கண்ணாடி, ‘கூலிங் கிளாஸ்’, பிரதிபலிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஆகியவை வழியாகவும் சூரியனை பார்க்கக்கூடாது. அதையும் மீறி பார்ப்பவர்களின் கண் பார்வையில் பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் நேற்று திண்டுக்கல் மாவட்ட பகுதியில், சூரிய கிரகண நிகழ்வை அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண்ணாடிகளை அணிந்து பொதுமக்கள் பார்த்தனர்.

சூரிய கிரகணம் காரணமாக திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை முதலே வானில் கார்மேக கூட்டங்கள் திரண்டன. அத்துடன் குளிரான காலநிலையும் நிலவியது. காலை 8 மணி முதல் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் நிலவு வரத்தொடங்கியது. இதன் காரணமாக சூரியன் மெல்ல, மெல்ல மறைய தொடங்கியது. காலை 9.30 மணிக்கு சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. அப்போது சூரியனை பார்க்கும் போது நெருப்பு வளைய வடிவத்தில் இருந்தது.

சூரிய கிரகண நிகழ்வை பொதுமக்கள் பார்க்கும் வகையில் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதாவது, சிறிய அளவிலான டெலஸ்கோப், பிரத்யேக கண்ணாடி பொருத்தப்பட்ட பெட்டகம், கண் கண்ணாடி போன்ற உபகரணங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் கல்லூரி மாணவிகளும், பொதுமக்களும் நெருப்பு வளைய வடிவ சூரிய கிரகண நிகழ்வை உற்சாகத்துடன் பார்த்து ரசித்தனர். காலை 11.10 மணி வரை சூரிய கிரகணம் நீடித்தது. அதன் பின்னர் மெல்ல, மெல்ல நிலவு நேர்கோட்டில் இருந்து விலகியதும், சூரியன் தனது கதிர் வீச்சுகளை பூமியில் பரவ விட்டது.

இதே போல் கொடைக்கானலில், காலை 8.06 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட தொடங்கியது. பின்னர் 9.31 மணி முதல் 9.33 மணி வரை 2 நிமிடங்களில் சூரியனை, நிலவு முழுமையாக மறைத்தது. இதனால் வளைய வடிவத்தில் சூரியன் தென்பட்டது. இந்த அபூர்வ காட்சியை, கொடைக்கானல் அப்சர் வேட்டரியில் உள்ள வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து டெலஸ்கோப் மூலம் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அத்துடன் பிரத்யேக கண்ணாடிகள் மூலமும் சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

மேலும் கோக்கர்ஸ்வாக் பகுதியில் சூரிய கிரகணத்தை சுற்றுலா பயணிகள் பார்க்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு ஏராளமானோர் சூரிய கிரகணத்தை கண்டுகளித்தனர். இதுபோன்ற சூரிய கிரகணத்தை 2031-ம் ஆண்டில் தான் பார்க்க முடியும் என்று வானியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழனியில் காலை முதலே வானில் மேக மூட்டமாக காணப்பட்டது. ஆனாலும் சூரிய கிரகணம் தெளிவாக தெரிந்தது. காலை 8.09 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்பட தொடங்கியது. 10 மணிக்கு சூரியனை, நிலவு மறைத்தது. இதனை பொதுமக்கள், பக்தர்கள் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்த்தனர்.

ஆனாலும் சிலர் வெறும் கண்களால் சூரிய கிரகண நிகழ்வை பார்த்தனர். மேலும் தங்களின் செல்போன்களிலும் புகைப்படம் எடுத்தனர்.

சூரிய கிரகணம் ஏற்பட்ட நேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றினர். அதாவது, காலை உணவை கிரகணம் ஏற்படுவதற்கு முன்பு சாப்பிட வேண்டும். ஒருவேளை சாப்பிடவில்லை என்றால் கிரகணம் முடியும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது. கிரகண நேரத்தில் பாத்திரங்களில் உணவு பொருட்களை வைக்க கூடாது என்று, வயதானவர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அறிவுறுத்தினர். அத்துடன் கிரகணம் முடிந்ததும் வீடு முழுவதும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, பாத்திரங்களையும் கழுவி வைக்க வேண்டும். தொடர்ந்து பூஜை அறையில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்துவிட்டு அதன் பின்னரே சமையல் வேலைகளை செய்யும்படி தெரிவித்தனர். அதன்படியே மாவட்டத்தில், கிரகண நேரத்தில் யாரும் உணவு சாப்பிடவில்லை.

Next Story