திருச்சி, கரூர், புதுக்கோட்டையில் வானில் வர்ணஜாலம் காட்டிய கங்கண சூரிய கிரகணம்


திருச்சி, கரூர், புதுக்கோட்டையில் வானில் வர்ணஜாலம் காட்டிய கங்கண சூரிய கிரகணம்
x
தினத்தந்தி 27 Dec 2019 4:15 AM IST (Updated: 27 Dec 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி,கரூர், புதுக் கோட்டை ஆகிய பகுதிகளில் வானில் வர்ணஜாலம் காட்டிய கங்கண சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்த்து வியந்தனர். அண்ணா அறிவியல் மையத்தில் 3 ஆயிரம் பேர் திரண்டனர்.

திருச்சி,

சூரியனை புவி சுற்றிவரும் பாதையுள்ள தளமும், நிலவு புவியை சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளது. நிலவு பூமியை சுற்றிவரும் பாதை பூமி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும். இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசை மற்றும் முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் நிகழும். நிலவு சூரியனை விட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது.

வெகு தொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறியதாக இருக்கும். எனவே, அப்போது கிரகணம் நிகழ்ந்தால் சூரியனை நிலவால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம் அல்லது நெருப்பு வளையம்போல சூரியனின் வெளிவிளிம்பு அதிக பட்ச கிரகணத்தின்போது வெளியே தெரியும். நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம்தான் நேற்று திருச்சியில் தெரிந்தது. இந்த கிரகணமானது நேற்று திருச்சி மட்டுமல்லாது கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அற்புதமாக புலப்பட்டது.

அறிவியல் மையத்தில் ஏற்பாடு

அபூர்வமாக தோன்றிய கங்கண சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் துல்லியமாக தெரியாது என்பதால், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள கோளரங்கம் அண்ணா அறிவியல் மையத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்ப்பதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரிய பிம்பத்தை திரையில் விழச்செய்து காண்பிக்க ஏதுவாக தொலைநோக்கி அமைப்பு, சூரிய ஒளி வடிகட்டித்தகடுகள், கண்ணாடிகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.

திருச்சியை பொறுத்தமட்டில் காலை 8.07 மணிக்கு சூரியனை நிலவின் ஒரு பகுதி மெல்ல மெல்ல மறைக்க தொடங்கியது. இந்த அரிய நிகழ்வை காண திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அண்ணா அறிவியல் மையத்தில் திரண்டனர். அவர்கள் அங்கு வெறுங்கண்ணால் சூரியனை பார்க்காமல், அறிவியல் மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உபகரணங்கள் மூலம் எளிதாக சூரியகிரகணத்தை கண்டு வியந்தனர்.

ரூ.50-க்கு சோலார் கண்ணாடி

மேலும் அண்ணா அறிவியல் மையம் அருகில் சூரியகிரகணத்தை எளிதாக பார்க்கும் வகையில் ‘சோலார் எக்ளிப்ஸ்’ கண்ணாடிகளை சிலர் ரூ.50-க்கு விற்பனை செய்தனர். அறிவியல் மையத்திற்கு குடும்பத்துடன் வந்தவர்கள் அக்கண்ணாடிகளை வாங்கி வானில் வர்ணஜாலம் காட்டிய நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். என் வாழ்நாளில் இப்போதுதான் இப்படியொரு சூரிய கிரகணத்தை பார்த்ததாக குழந்தைகளுடன் வந்த கல்லூரி பேராசிரியர் தம்பதியான கருமண்டபத்தை சேர்ந்த முத்தையன்-பிரபா ஆகியோர் தெரிவித்தனர்.

காலை 9.31 மணி முதல் 9.33 மணிவரை நிலவு முழுமையாக சூரியனை மறைத்தது. ஆனாலும், முழுமையான சூரியகிரகணம் ஏற்பட்டதுபோல தோன்றினாலும் நிலவை சுற்றி சூரியன் நெருப்பு வளையம்போல காட்சி அளித்து அனைவரையும் ஆச்சரியமடைய செய்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல சூரியனை விட்டு நிலவு விலகத்தொடங்கியது. நிலவு சூரியனை மெல்ல மெல்ல மறைக்கும் நிகழ்வானது காலை 8.07 மணிக்கு தொடங்கி காலை 9.32 மணிக்கு உச்சம் பெற்று சூரியன் நெருப்பு வளையம்போல காட்சி அளித்தது. பின்னர் காலை 9.33 மணி முதல் சூரியனை விட்டு நிலவு மெல்ல மெல்ல விலக தொடங்கி காலை 11.16 மணிக்கு முழுமையாக விலகியது. சூரிய கிரகணத்தின்போது சூரியன் மோதிரம்போலவும், பிறை வடிவிலும், அரை வட்டமாகவும் காட்சி அளித்தது.

கரூர்

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டு, சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் நேற்று சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட அறிவியல் இயக்கம் சார்பில், கரூர் காந்திகிராமம் விளையாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி நேற்று காலை 7.30 மணியளவில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடினர். பின்னர் மாவட்ட செயலாளர் ஜான்பா‌ஷா உள்ளிட்ட அறிவியல் இயக்கத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு, சூரிய கதிர்வீச்சினை தடுத்து நிறுத்தும் வகையிலான பாதுகாப்பு கண்ணாடிகளை வழங்கினார்கள். இதையடுத்து கரூர் மாவட்டத்தில் வளைய சூரிய கிரகணம் காலை 8.15 மணிக்கு தொடங்கி, 11.15 மணி வரையில் நிகழ்ந்தது. இதில் முழு சூரிய கிரகணம் காலை 9.30 மணியில் இருந்து 9.34 மணி வரை காணப்பட்டது. இதனை அங்கு கூடிநின்ற சிறுவர்-சிறுமிகள், பொதுமக்கள், இளைஞர்கள் பாதுகாப்பு கண்ணாடி மூலம் கண்டு ரசித்தனர். இதற்கிடையே லென்ஸ் பொருத்தப்பட்ட உபகரணங்களும் பார்வையிட அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன.

இதேபோல், கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியிலும் தொலைநோக்கி (ஸ்கை வாட்ச்சர் டெலஸ்கோப்), பாதுகாப்பு கண்ணாடி, வெல்டிங் பட்டறை கண்ணாடி உள்ளிட்டவை வைக்கப்பட்டு சூரிய கிரகண நிகழ்வினை மாணவ, மாணவிகள், பொதுமக்கள் காண்பதற்கு இயற்பியல் துறை சார்பில் வழிவகை செய்யப்பட்டது. இங்கு பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக வந்து சூரிய கிரகணத்தை பார்வையிட்டு ரசித்தனர். அப்போது, சூரியனானது வெப்ப ஆற்றலுடன் கூடிய கதிர்வீச்சினை வெளியிடுவதால் வெறும் கண்ணால் அதனை பார்க்க கூடாது, இது போன்ற சூரிய கிரகணம் அடுத்து 2031-ல் தான் நிகழும் என்பதனை விளக்கி தற்போதைய கிரகணத்தின் சிறப்பம்சத்தை துறை தலைவர் சிவகாமி மற்றும் பேராசிரியர்கள் எடுத்துரைத்தனர். வானவியல் பாடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிற மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் தகுந்த உபகரணங்களுடன் கிரகணத்தை பார்வையிட்டு குறிப்பெடுத்து வைத்து கொண்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டு, சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், அறிவியல் இயக்கத்தின் சார்பில் தொலைநோக்கி அமைக்கப்பட்டிருந்தது. திரளான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு வளைய சூரிய கிரகணத்தை தொலைநோக்கி, பாதுகாப்பு கண்ணாடி மூலம் கண்டு களித்தனர். இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலெட்சுமி, சென்னை முன்னாள் மேயர் சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டு சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

புதுக்கோட்டையில் வளைய சூரிய கிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி, 11.15 வரையில் நிகழ்ந்தது. இதில் முழு சூரிய கிரகணம் காலை 9.30 மணி முதல் 9.35 மணி வரை காணப்பட்டது. கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது என்ற நம்பிக்கையை மாற்றும் விதமாக கிரகணத்தை காண வந்த அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. மாவட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் சூரிய கிரகணத்தை கண்டு ரசித்தனர்.

தாம்பாளத்தில் நின்ற உலக்கை

இந்நிலையில் கீரனூர் தேர் காலனி 9-ம் வீதியில் ஒரு வீட்டின் முன்பாக ஒரு பித்தளை தாம்பாளத்தில் உலக்கை ஒன்றை நிற்க வைத்தனர். கிரகணம் தொடங்குவதற்கு முன்பு நிற்காமல் கீழே விழுந்த உலக்கை, கிரகணம் தொடங்கியதும் கீழே விழாமல் தாம்பாளத்தில் நின்றது. இதனை அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். கிரகணம் முடிந்ததும், அந்த உலக்கை கீழே விழுந்துவிடும் என்று கூறப்பட்டது. ஆனால் கிரகணம் முடிந்தும், உலக்கை கீழே விழாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

Next Story