மாணவி வெளியேற்றப்பட்ட விவகாரம்: பல்கலைக்கழக பதிவாளர், போலீஸ் டி.ஜி.பி.யிடம் அமைச்சர் விசாரணை
ஜனாதிபதி பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவி வெளியேற்றப்பட்டது குறித்து பல்கலைக்கழக பதிவாளர், போலீஸ் டி.ஜி.பி.யிடம் அமைச்சர் கந்தசாமி விசாரணை நடத்தினார்.
புதுச்சேரி,
புதுவை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கடந்த 23-ந்தேதி நடந்தது. மாணவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பட்டங்களை வழங்கினார். முன்னதாக விழா அரங்கிலிருந்து மாஸ் கம்யூனிகேசன் பாட பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவி ரபீக்கா அப்துரகீம் வெளியேற்றப்பட்டார்.
ஜனாதிபதி சென்றபின் அவரை அழைத்து வழங்கப்பட்ட தங்கப்பதக்கத்தை பெற அந்த மாணவி மறுத்து விட்டார். இந்த விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜனாதிபதி விழாவில் மாணவி வெளியேற்றப்பட்டதற்கு மாணவர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு பல்கலைக்கழக துணைவேந்தர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோருக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கந்தசாமி விசாரணை நடத்தினார். போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, பல்கலைக்கழக பதிவாளர் சித்ரா, சமூகநலத் துறை செயலர் ஆலீஸ்வாஸ் ஆகியோரை நேற்று சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து வாய்மொழியாக அவர்கள் விளக்கம் அளித்தனர். இந்த விவகாரம் குறித்து வீடியோ காட்சிகளையும் காட்டினார்கள்.
இதுதொடர்பாக அமைச்சர் கந்தசாமி கூறிய தாவது:-
பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். முஸ்லிம் என்பதால் அந்த மாணவியை தனியாக பிரித்து வைக்கவில்லை. மாணவிகளுக்கு பட்டம் வழங்குவதுதான் கடமை. தங்கள் தரப்பில் தவறு ஏதும் இல்லை என்று தெரிவித்தனர்.
நடந்த சம்பவங்கள் குறித்து முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் ஆகியோருக்கும் எங்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளிப்பதாக கூறி சென்றுள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.
Related Tags :
Next Story