வேலூரில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரங்கள் - கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூரில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரங்களை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
வேலூர்,
தமிழகத்தில் ஒருமுறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்து, அதை மறுசுழற்சிக்காக பயன்படுத்த தலா ரூ.5 லட்சம் மதிப்புடைய 2 எந்திரங்களை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வேலூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ‘பி’ பிளாக்கில் தொடங்கி வைத்தார்.
இந்த எந்திரங்கள் தனியார் டயர் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியக்கூடிய காலி தண்ணீர் பாட்டில்களை பொது இடங்களில் போடாமல் இந்த எந்திரத்தில் போட்டு, அதில் உள்ள எண்களை அழுத்தினால், எந்திரம் தயாராகி காலி பாட்டில்களை உள்ளே இழுத்து நசுக்கி சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த சேமிப்பு பாட்டில்கள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்பட்டு சுற்றுப்புறம் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்கப்படும்.
எனவே மேற்கண்ட அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை கீழே போடாமல் இந்த எந்திரங்களில் போட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். தொடக்க நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, செயற்பொறியாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story