சேலத்தில் சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்


சேலத்தில் சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் பார்த்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 26 Dec 2019 11:00 PM GMT (Updated: 26 Dec 2019 9:28 PM GMT)

சேலத்தில் சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

சேலம்,

சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதால்தான் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்ேபாது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் நிலவு, சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைத்து விடும். இந்த அரிய நிகழ்வு நேற்று நிகழ்ந்தது. சேலம் மாவட்டத்தில் காலை 9.15 மணியளவில் தொடங்கி காலை 11.00 மணி வரை சூரிய கிரகணம் ஏற்பட்டது.

சூரிய கிரகணத்தை உரிய பாதுகாப்பின்றி வெறும் கண்களாலோ, சாதாரண கண்ணாடிகளை அணிந்தோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் சூரியனை சுற்றி சிவப்பு நிற வட்ட வளையம் தோன்றியது.

இந்த அபூர்வ நிகழ்வை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பிரத்யேக கண்ணாடிகள் மூலம் பார்த்தனர்.

தொலைநோக்கி

சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் அவ்வப்போது சூரியகிரகணம் ஓரளவு தெரிந்தது. காலை 10.15 மணியளவில் சூரிய கிரகணத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. சேலம் புதிய பஸ்நிலையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் தொலைநோக்கி மூலம் சூரியகிரகணத்தை பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி சூரிய கிரகணத்தை பொதுமக்கள் தொலைநோக்கிைய பயன்படுத்தி பார்த்தனர்.

மேலும் சூரிய ஒளி வடிகட்டி கண்ணாடி, கண்ணாடி பிரதிபலிப்பு காட்சி, தொலைநோக்கி பிரதிபலிப்பு போன்ற காட்சிகள் மூலமாக பொதுமக்கள், மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமிகள் சூரிய கிரகணத்தை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் சூரிய கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து மாணவர்கள், பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

கோவில் நடை அடைப்பு

சூரிய கிரகணத்தையொட்டி சேலம் கோட்டை பெருமாள் கோவில், ராஜகணபதி கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடைஅடைக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆனால் சேலத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் நடை அடைக்கப்படாமல் திறந்தே இருந்தது. அதாவது கோட்டை மாரியம்மன் நவக்கிரக நாயகி என்பதால் கோவில் நடை திறந்து இருந்ததாக பூசாரிகள் தெரிவித்தனர். அங்கு சில பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

நேராக நின்ற உலக்கை

பெத்தநாயக்கன்பாளையம் அருகே புங்கவாடியில் சிறிதளவு தண்ணீரை தட்டில் ஊற்றி உலக்கையை செங்குத்தாக எந்த பிடிப்பும் இல்லாமல் நிற்க வைத்தனர். அப்போது உலக்கை சூரிய கிரகணம் முடியும் வரை கீழே விழாமல் நேராக நின்று இருந்ததை காணமுடிந்தது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதே போன்ற சூரிய கிரகணம் 2031-ம் ஆண்டு மே மாதம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story