விருத்தாசலம் அருகே, மொபட்- மோட்டார் சைக்கிள் மோதல்; முதியவர் சாவு - தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர் தம்பதி படுகாயம்
விருத்தாசலம் அருகே மொபட்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார். மேலும் தேர்தல் பணிக்கு சென்ற ஆசிரியர் தம்பதியினர் படுகாயமடைந்தனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே உள்ள நறுமணம் கிராமத்தை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 42). இவரது மனைவி மார்க்ரேட் சாந்தி (38). இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சத்தியவாடி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த மொபட் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், ஆசிரியர்கள் இருவரும் படுகாயமடைந்தனர். மேலும் மொபட்டை ஓட்டி வந்த 60 வயது மதிக்கத்தக்கவரும் காயமடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முதியவர் உயிரிழந்தார். மேலும் ஏசுதாஸ், அவரது மனைவி மார்க்ரேட் சாந்தி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே சத்தியவாடி பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி விபத்துக்கள் நடந்துவருகிறது. இதை தடுக்க அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறி அப்பகுதி மக்கள் விருத்தாசலம்-திட்டக்குடி சாலையில் சத்தியவாடி பஸ் நிறுத்தத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story