மராட்டிய மந்திரி சபை 30-ந் தேதி விரிவாக்கம் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்


மராட்டிய மந்திரி சபை 30-ந் தேதி விரிவாக்கம் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 27 Dec 2019 5:15 AM IST (Updated: 27 Dec 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மந்திரி சபை 30-ந் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து உள்ளன.

மும்பை, 

மராட்டிய மந்திரி சபை 30-ந் தேதி விரிவாக்கம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து உள்ளன.

புதிய ஆட்சி

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதல்-மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் மந்திரிகளாக பதவியேற்றனர். ஆனால் மந்திரிசபை விரிவாக்கத்தில் தொடர்ந்து கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா கேள்விகளை எழுப் பியது.

இதற்கிடையே இந்த வார தொடக்கத்தில் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் அதன்படி மந்திரி சபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

30-ந் தேதி

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை சந்தித்து மந்திரி சபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதை தொடர்ந்து வரும் 30-ந் தேதி (திங்கட்கிழமை) மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை தற்போது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ளன.

அன்றைய தினம் 36 மந்திரிகள் பதவியேற்பார்கள் எனவும், மாநில சட்டமன்ற வளாகமான விதான் பவனில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

பதவி ஏற்பு விழா தொடர்பாக விதான் பவன் வளாகத்தில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேடை அமைப்பதற்காக அளவு செய்யும் பணியும் நடந்தது.

இதற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான பாலசாகேப் தோரட் அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

பட்டியல் தயார்

எங்கள் கட்சி சார்பில் மந்திரிசபையில் பதவியேற்க உள்ள தலைவர்களின் பட்டியல் தயாராக உள்ளது. காங்கிரஸ் கட்சி துணை முதல்-மந்திரி பதவியை கோருவதாக கூறப் படுவதில் உண்மை இல்லை. கடந்த வாரம் வரை நாக்பூரில் நடந்த குளிர்கால கூட்டத்தொடர் காரணமாகவே மந்திரி சபை விரிவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிவசேனாவுக்கு முதல்-மந்திரி பதவி தவிர மந்திரிசபையில் 16 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 14 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 12 இடங்களும் வழங்கப்படலாம் என தெரிகிறது.

*

இலாகா ஒதுக்கீட்டில் காங்கிரஸ் அதிருப்தி

மராட்டிய மந்திரிசபை விரிவாக்கம் 30-ந் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்களை ஏற்கனவே பதவி ஏற்ற 2 மந்திரிகள் கவனித்து வருகிறார்கள். அந்த இலாகாக்களில் மாநில காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து கட்சியின் மாநில தலைவர்கள் தங்கள் அதிருப்தியை காங்கிரஸ் மேலிடத்தில் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டு உள்ள தகவலில், “காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட பல்வேறு இலாகாக்கள் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்துவது போன்று இல்லை. இப்போது சரியான ஒப்பந்தம் செய்யப்படாவிட்டால், மராட்டியத்தில் காங்கிரஸ் பாதிக்கப்படும். விவசாயம், கூட்டுறவு, வீட்டுவசதி, நிதி, கிராம மேம்பாடு ஆகிய இலாகாக்களை பெறுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதிகார சமநிலை (மூன்று கட்சிகளிடையே) ஏற்படும்” என்று கூறப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து கட்சியின் நிறுவன தினமான நாளை (சனிக்கிழமை) காங்கிரஸ் பொது செயலாளர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் விவாதிக்கப்படும் என மாநில மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Next Story