திருப்பூர், அவினாசியில், சூரியகிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைப்பு


திருப்பூர், அவினாசியில், சூரியகிரகணத்தையொட்டி கோவில்களில் நடை அடைப்பு
x
தினத்தந்தி 27 Dec 2019 3:30 AM IST (Updated: 27 Dec 2019 5:59 AM IST)
t-max-icont-min-icon

சூரிய கிரகணத்தையொட்டி திருப்பூர் மற்றும் அவினாசியில் உள்ள கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டன.

திருப்பூர், 

சூரிய கிரகணம் நேற்று காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.19 மணி வரை நிகழ்ந்தது. இதையொட்டி திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மார்கழி மாத காலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் 7 மணிக்கு நடை அடைக்கப்பட்டன.

மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டு, பரிகார பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வழக்கம் போல பூஜைகள் நடைபெற்றன.

அவினாசியில் வரலாற்று சிறப்புபெற்ற பெருங்கருணை நாயகி உடனமர் அவுனாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு இக்கோவில் நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறந்து அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை சாத்துவது வழக்கத்தில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று சூரிய கிரகணம் நடைபெற்றதால் காலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் பகல் 12 மணிக்கு கோவில் திறந்து உச்சிகால பூஜை முடித்து பின் நடை சாத்தப்பட்டது.

அதை தொடர்ந்து வழக்கம்போல் மாலை 4 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. நேற்றுகாலை கோவில் நடை அடைக்கப்பட்டிருந்ததால் பக்தர்கள் கூட்டம் இல்லாமல் கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story